சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலி உடன் வந்தவர் படுகாயம்


சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி மீனவர் பலி உடன் வந்தவர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Jun 2017 4:45 AM IST (Updated: 15 Jun 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளம் அருகே காம்பவுண்டு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மீனவர் பலியானார். உடன் வந்தவர் படுகாயம் அடைந்தார்.

தென்தாமரைகுளம்,

மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள கேசவன்புத்தன்துறையை சேர்ந்தவர் அருள்வளன் (வயது 54), மீனவர். இவருடைய உறவினர் திருமணம் கன்னியாகுமரி அருகில் உள்ள கோவளத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அருள்வளன் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை கோவளத்திற்கு சென்றார்.

திருமணம் முடிந்ததும் அருள்வளன், அங்கு வந்திருந்த கேசவன்புத்தன்துறை பீட்டர் தெருவை சேர்ந்த நலன்கிளாடிஸ் (27) என்பவரது மோட்டார் சைக்கிளில் மணக்குடி பகுதியில் உள்ள ஒரு நண்பரை பார்க்க சென்றார். மோட்டார் சைக்கிளை நலன்கிளாடிஸ் ஓட்டினார். அங்கு நண்பரை பார்த்து விட்டு மதியம் கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிள் தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன் குடியிருப்பை அடுத்த நரியன்விளை திருப்பத்தில் வரும் போது நிலை தடுமாறி ரோட்டு ஓரத்தில் உள்ள காம்பவுண்டு சுவர் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதனால் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது.

பலி

மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த அருள்வளன் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

நலன் கிளாடிஸ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நலன் கிளாடிசை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும், தென்தாமரைகுளம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

குடும்பம்

விபத்தில் பலியான அருள் வளனுக்கு மார்த்தாள் என்கிற மனைவியும், அமீன், அசின் என இரு மகன்களும் உள்ளனர்.

படுகாயம் அடைந்த நலன் கிளாடிஸ் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் தான் ஊருக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story