அனுமதி இன்றி செயல்பட்ட 3 தண்ணீர் கேன் கம்பெனிகளுக்கு ‘சீல்’ வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
செங்குன்றம் அருகே, அனுமதி இன்றி செயல்பட்ட 3 தண்ணீர் கேன் கம்பெனிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சியில் 20–க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன் தயாரிக்கும் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான கம்பெனிகள், உரிய அனுமதி இன்றி செயல்படுவதாக கூறப்படுகிறது.
அங்கு ராட்சத மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, ஊராட்சி ஆழ்துளை கிணறுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு அந்த பகுதி பொதுமக்கள் சார்பில் புகார்கள் வந்தன.
3 கம்பெனிகளுக்கு ‘சீல்’அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து பொன்னேரி மண்டல துணை தாசில்தார் சீனிவாசன், சோழவரம் வருவாய் அதிகாரி வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் நல்லூர் ஊராட்சியில் உள்ள தண்ணீர் கேன் தயாரிக்கும் கம்பெனிகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அதில் பல்வேறு கம்பெனிகள் அனுமதி இன்றி செயல்பட்டு வருவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து முதல் கட்டமாக நேற்று முன்தினம் காந்தி நகர் அருகே அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 3 தண்ணீர் கேன் கம்பெனிகளை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
பணி தொடரும்மேலும் அங்கிருந்த 11 மின் மோட்டார்கள் மற்றும் உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘நல்லூர் ஊராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான தண்ணீர் கேன் தயாரிக்கும் கம்பெனிகள் அனுமதி இன்றி செயல்படுவதை நாங்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்தோம். குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக அனுமதி இன்றி செயல்பட்டு வரும் அந்த கம்பெனிகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணி தொடரும்’’ என்றார்.