மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டம் 500–க்கும் மேற்பட்டோர் கைது
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 500–க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த கனகராஜ் எம்.எல்.ஏ., ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கூவத்தூர் சொகுசு விடுதியில் கோடிக்கணக்கில் பணம்–தங்கம் வழங்கப்பட்டதாக பேசியதாக கூறப்படும் பரபரப்பு வீடியோ சமீபத்தில் வெளியானது.
நேற்று சட்டசபை கூடியதும் இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க தி.மு.க. செயல்தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுந்துபேச முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால், சபையில் கூச்சல்–குழப்பம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். பின்னர், அனைவரும் ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் சாலைமறியல்இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அறிந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரவுண்டானா முன்பு நேற்று மதியம் 1 மணிக்கு சாலைமறியல் போராட்டம் நடந்தது.
இதற்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் கலையமுதன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜி.கே.சுபாசு, மாநகர செயலாளர் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் குணசேகரன், பச்சியப்பன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும் என்றும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட 150 பேரைசேலம் டவுன் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு போஸ் மைதானத்தில் உள்ள நேரு கலையரங்கில் வைக்கப்பட்டனர்.
கொண்டலாம்பட்டிசேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்குமார், வெண்ணிலாசேகர், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தின்போது ஸ்டாலினை வாழ்த்தியும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் மறியலில் ஈடுபட்ட 70 பேரை கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர்.
அயோத்தியாப்பட்டணம் சோதனை சாவடி அருகில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் விஜயகுமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எடப்பாடிசேலம் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் எடப்பாடி பஸ் நிலையம் முன்பு தி.மு.க. வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கு சேலம் மேற்கு மாவட்ட துணைசெயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழுஉறுப்பினர்கள் சுப்பிரமணியம், அன்பழகன், மாவட்ட துணைசெயலாளர் சம்பத்குமார், மாநில செயற்குழுஉறுப்பினர் பி.ஏ.முருகேசன், முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலைமறியலில் நகரசெயலாளர் பாஷா, ஒன்றியசெயலாளர்கள் நல்லதம்பி, பரமசிவம், பச்சமுத்து, நிர்மலா மற்றும் பேரூர் செயலாளர் அர்த்தனாரிஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 106 பேரை எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி தனியார் திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஏற்காடுஏற்காடு பஸ் நிலையம் முன்பு ஏற்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியல் காரணமாக பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பஸ்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்றன. அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
நங்கவள்ளி பஸ் நிலையம் அருகே ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேச்சேரிகுஞ்சாண்டியூரில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 35 பேரும், மேச்சேரியில் ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையில் 30 பேரும், கொளத்தூரில் ஒன்றிய செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 9 பேரும், ஏத்தாப்பூரில் ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரும், வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் செல்வம் உள்பட 18 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 504 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.