அரசு ஆஸ்பத்திரிகளில் உடனடியாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி


அரசு ஆஸ்பத்திரிகளில் உடனடியாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 15 Jun 2017 5:12 AM IST (Updated: 15 Jun 2017 5:12 AM IST)
t-max-icont-min-icon

நோயாளிகள் பாதிக்கப்படுவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் உடனடியாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று சேலத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் தெரிவித்துள்ளார்.

சேலம்,

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். பின்னர், அவர் அங்கிருந்த அதிகாரிகளை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்து அதை சேலம் மாவட்ட கலெக்டர் வழியாக தமிழக முதல்–அமைச்சருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு அர்ஜூன்சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உரிய நேரத்தில் அவசர சிகிச்சை கிடைப்பது கூட தாமதமாகிறது. நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் சூழ்நிலையை காணமுடிகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் டாக்டர்கள் தேவை. ஆனால் 18 ஆயிரம் டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோரும் போதுமான அளவு இல்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே, நோயாளிகள் பாதிக்கப்படுவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் உடனடியாக டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

நவீன உபகரணங்களை வாங்க வேண்டும்

செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதோடு அரசு ஆஸ்பத்திரி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தேவையான மருத்துவ பரிசோதனை கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள், ஸ்கேன் கருவிகள், அறுவை சிகிச்சை கூடங்களுக்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்க வேண்டும். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடப்பதற்கு வசதியாக கோவில் திருப்பணி வேலைகளை வேகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, இந்து மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் குணசேகரன், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகி வக்கீல் ரஜினிசெந்தில் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story