விடுதி கணக்காளர் கொலை வழக்கில் பட்டதாரி ஆசிரியர் கைது


விடுதி கணக்காளர் கொலை வழக்கில் பட்டதாரி ஆசிரியர் கைது
x

விடுதி கணக்காளர் கொலையில் பட்டதாரி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

விடுதி கணக்காளர் கொலையில் பட்டதாரி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அவர் தனது கள்ளக்காதலியை தன்னிடம் இருந்து பிரித்ததால் வெட்டிக்கொலை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

வெட்டிக்கொலை

திருப்பத்தூரை அடுத்த மட்றப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). எம்.ஏ.,பி.எட். பட்டதாரியான இவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு அன்பழகன் (17) என்ற மகன் உள்ளார். அன்பழகன் பிறந்த சில மாதங்களிலேயே லட்சுமணன் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, மனைவி லதாவையும் பிரிந்து ஏலகிரிமலையில் உள்ள புங்கனூருக்கு சென்றுவிட்டார்.

அங்கு லட்சுமணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவரின் மனைவி கவிதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் கணவன்–மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

லட்சுமணன் ஏலகிரிமலையில் உள்ள தனியார் விடுதிகளில் கணக்காளராக வேலை பார்த்தார். அங்குள்ள விடுதிகளுக்கு கணக்கை சரிபார்த்து வருமானவரி கட்டும் வேலையை செய்து வந்தார்.

கள்ளத்தொடர்பு

இதனிடையே அவருக்கும், புத்தூர் பகுதியை சேர்ந்த வனிதாவுடன் லட்சுமணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 12–ந் தேதி மது அருந்துவதற்காக வீட்டை விட்டு வெளியே புறப்பட்ட லட்சுமணன் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன் தினம் காலை புங்கனூர் அருகே மலை பாதையில் முட்புதரில் கை, கால் வெட்டப்பட்ட நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பட்டதாரி ஆசிரியர் கைது

இது குறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், போலீசார் கொலையாளியை வலைவீசி தேடி வந்தனர்.

விசாரணையில், லட்சுமணனின் கள்ளக்காதலி வனிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேற்கொண்டு விசாரித்ததில், வனிதாவுக்கு, ஜவ்வாதுமலை புதூர்நாடு பகுதியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் அண்ணாமலை (27) என்பவருடன் ஏற்கனவே பழக்கம் இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அண்ணாமலையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், லட்சுமணனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலம்

இந்த கொலை தொடர்பாக அண்ணாமலை போலீசாருக்கு அளித்த வாக்குமூலம் குறித்த விவரம் வருமாறு :–

நானும், வனிதாவும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வருகிறோம். தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். கடந்த சில மாதமாக வனிதா என்னை விட்டு பிரிந்து லட்சுமணனுடன் பழக ஆரம்பித்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. வனிதாவை அழைத்து கண்டித்தேன். ஆனால் அதனை ஏற்காத வனிதா என்னை அடித்து அசிங்கபடுத்தினாள். அது எனக்கு அவமானமாக இருந்தது. எனவே லட்சுமணனை கொலை செய்வது என முடிவு செய்தேன். அதன்படி திட்டம் தீட்டி கடந்த 12–ந் தேதி லட்சுமணனை வெட்டி கொலை செய்தேன்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அண்ணாமலையை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Next Story