சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிர்ப்பு 5 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு
சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. மேலும் ஜவுளி வியாபாரிகள் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உண்ணாவிரதமும் இருந்தனர்.
ஈரோடு,
இந்தியா முழுவதும் வருகிற (ஜூலை) 1–ந் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஒவ்வொரு பொருளுக்கும் எத்தனை சதவீதம் வரி வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டு வரையறுக்கப்பட்டு உள்ளது. இதில் பல அத்தியாவசிய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்து உள்ளன.
குறிப்பாக ஜவுளி வணிகர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி பெரிய பாதிப்பாக இருக்கும் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் 15–ந் தேதி (நேற்று) ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள ஜவுளி கடைகள் அடைக்கப்படும் என்று ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சங்கம் அறிவித்து இருந்தது.
22 சங்கங்கள்இந்த போராட்டத்துக்கு ஈரோடு மில் கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன், ஈரோடு நூல் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு சைசிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்கம், சொக்கநாத வீதி வியாபாரிகள் சங்கம், டி.வி.எஸ். வீதி நலம்நாடும் வியாபாரிகள் சங்கம், ஈரோடு டெக்ஸ்டைல்ஸ் டிரேடர்ஸ் அசோசியேசன், வீரப்பன்சத்திரம் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் உள்பட 22 சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சங்கத்தினர் அறிவித்தபடி நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன.
உண்ணாவிரதம்மேலும் ஜவுளி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சிதம்பர சரவணன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர் சம்மேளன தலைவர் எம்.எஸ்.மதிவாணன் உள்பட ஜவுளி வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
இதுபற்றி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் பி.ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஜவுளி வியாபாரிகள், சிறு வணிகர்கள், சிறு–குறு தொழிலாளர்களுக்கு நடைமுறையில் ஒத்துவராத வரித்திட்டமாக சரக்கு மற்றும் சேவை வரித்திட்டம் உள்ளது. இதுவரை தங்கள் தொழிலை பார்த்துக்கொண்டு இருந்த வியாபாரிகள் இனிமேல் அரசுக்கு வரி செலுத்தும் வேலையை மட்டுமே முழு நேரமாக செய்ய வேண்டியது இருக்கும்.
ரூ.30 கோடிபான் எண் (நிரந்தர கணக்கு எண்), ஆதார் எண், மின்னணு கையொப்பம், சரக்கு மற்றும் சேவை வரி பதிவேற்றம் என்று பல்வேறு வேலைகள் கணினியில் செய்யப்பட வேண்டும். இதற்காக எந்த ஒரு சிறு நிறுவனமாக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு கணினி வாங்கி வைப்பதுடன், கணினி இயக்குபவரையும் பணியில் நியமிக்க வேண்டும். ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகளில் பெரும்பாலானோர் தனி ஒருவராக வேலை செய்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இந்த சூழலில் கணினியில் பதிவேற்றம் செய்வது என்பது இயலாத காரியம்.
நேர்மையாக தொழில் செய்தாலும், வழக்குகளுக்கு பயந்து லஞ்சம் கொடுக்கும் நிலை ஏற்படும். இது உலக பெரும் பணக்கார நிறுவனங்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கவும், சிறு குறு தொழில்களை அழிக்கும் நோக்கமே ஆகும். எனவே சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அரசு கைவிடவேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (நேற்று) 5 ஆயிரம் ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. 30 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இந்த போராட்டத்தில் 22 சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இந்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் சுமார் ரூ.30 கோடி அளவில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் பி.ரவிச்சந்திரன் கூறினார்.