குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள ஒட்டபாளையத்தை அடுத்துள்ளது செம்புளிச்சாம்பாளையம் கிராமம். இங்குள்ள கிழக்குதெரு பகுதியில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 ஆழ்குழாய்கள் அமைத்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை தொட்டியில் ஏற்றி குழாய் வழியாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மின்மோட்டார் பழுதானதால் கடந்த 6 மாதமாக முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரியவருகிறது. இதனால் பலநாட்களாக சிரமப்பட்டு வந்த கிராமமக்கள் நேற்று காலை பாட்டப்பான் கோவில் அருகே அந்தியூர்–பவானி ரோட்டில் ஒன்று திரண்டார்கள். பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்லமுடியவில்லை.

பேச்சுவார்த்தையில் சமாதானம்

கிராமமக்களின் சாலைமறியல் குறித்து தகவல் கிடைத்ததும், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், ‘6 மாதமாக தண்ணீர் வினியோகம் இல்லை நாங்கள் என்ன செய்வது?‘ என்றார்கள். அதற்கு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி தற்போது கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு சென்றுவிட்டார். நாளை (அதாவது இன்று) பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு ஏற்படுத்தி தருகிறோம். தற்காலிகமாக இன்று அருகே உள்ள கிராமத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்கிறோம்‘ என்றார். அதை ஏற்று கிராமமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்துசென்றார்கள்.


Next Story