கூடுவாஞ்சேரி அருகே பசு மாட்டின் பால் மடியை வெட்டி துன்புறுத்தல்
கூடுவாஞ்சேரி அருகே பசு மாட்டின் வால் மற்றும் பால் மடியை வெட்டி துன்புறுத்தியது தொடர்பாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு விஷ்ணுபிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 65). இவர் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல அவரது மாடு மேய்ச்சலுக்கு வெளியே சென்றது. பின்னர் மாலையில் உடலில் ரத்தம் வழிந்த நிலையில் வீட்டுக்கு வந்தது.
இதனை பார்த்த சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். அந்த மாட்டின் வால் மற்றும் பால் மடி கத்தியால் வெட்டி துன்புறுத்தப்பட்டிருந்தது.
வழக்குப்பதிவுஇது குறித்து சொக்கலிங்கம் கூடுவாஞ்சேரி போலீசில் காயரம்பேடு சவுபாக்யா நகர் பகுதியை சேர்ந்த துளசிநாயக்கர் மீது புகார் செய்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மாட்டை பார்த்தார். பின்னர் கூடுவாஞ்சேரி அரசு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மாட்டுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது.