கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள அரசு மாணவர் விடுதியில் அனுமதியின்றி தங்கி இருந்த 250 பேர் வெளியேற்றம்
கோவையில் உள்ள அம்பேத்கர் மாணவர் விடுதியில் அனுமதியில்லாமல் தங்கி இருந்த 250 பேர் வெளியேற்றப்பட்டனர்.
கோவை,
மாணவர் விடுதியில் கழிவுகள் அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
250 பேர் வெளியேற்றம்கோவை பாலசுந்தரம் ரோட்டில் அம்பேத்கர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்க கோவையில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்த 237 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த மாணவர்களுடன், வேறு சில வாலிபர்களும் தங்கி இருப்பதாக புகார்கள் வந்தன. விடுதியில் அடிக்கடி தகராறு நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ‘மாணவர் விடுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும், மாணவர்களுடன் வேறு நபர்கள் தங்கி இருப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ரமேஷ் என்பவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த விடுதியில் சோதனை நடத்தினார்கள். 237 மாணவர்களுடன், கூடுதலாக 250 பேர் அங்கு தங்கி இருப்பது தெரியவந்தது. பகல் நேரத்தில் விடுதியில் தங்காமல் இரவில் வந்து அவர்கள் தங்குவது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. ஆதி திராவிட நலத்துறை அதிகாரி மோகன் உத்தரவின்பேரில், அந்த வாலிபர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
தாசில்தார் ஆய்வுதொடர்ந்து மாணவர் விடுதியை தாசில்தார் சியாமளாதேவி ஆய்வு செய்தார். அப்போது விடுதி சுகாதாரம் இல்லாமல் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். விடுதி அறைகளிலும், விடுதி வளாகத்திலும் காலி மதுபாட்டில்கள் கிடந்ததை அவர் பார்த்தார். விடுதியில் மீதமான உணவு கொட்டப்பட்டு அகற்றப்படாமலும், கழிவு நீர் தேங்கி வெளியேறாமலும்,குப்பைகள் குவிந்தும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் நிலையை பார்த்து தாசில்தார் வருத்தமடைந்தார். இதனால் மாணவர்கள் கடும் பாதிப்பு அடைந்து இருப்பதையும்,இந்த நிலை ஏற்பட காரணம் என்ன? என்பது குறித்தும் விடுதி வார்டன் தியாகராஜனிடம் தாசில்தார் விசாரணை நடத்தினார்.
விடுதியை சுத்தப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து விடுதியை சுத்தப்படுத்தும் பணி இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்மாணவர் விடுதி பிரச்சினை குறித்து ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி மோகன் கூறியதாவது:–
அம்பேத்கர் விடுதியில், மாணவர்களுடன் வேறு நபர்கள் தங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது விடுதி மூடப்பட்டுள்ளது. வருகிற 19–ந்தேதி மீண்டும் விடுதி திறக்கப்படும். அதற்குள் விடுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே விடுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். விடுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் கூடுதல் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
குற்றவாளிகள் பதுங்கல்?குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு, சில வாலிபர்கள் இந்த விடுதியில் புகுந்து பதுங்கிக்கொள்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விடுதி தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:–
அரசுமான்வர் விடுதியில் இருப்பவர்கள் தங்களது இருப்பிடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.தாங்கள் படிக்க வந்துஇருப்பதை மனதில்கொண்டு, தங்களை தவிர மற்றவர்களை அனுமதிக்க கூடாது. விடுதி வார்டன் பல வழிகளில் மிரட்டப்படுவதாக புகார்கள் வந்துஇருக்கிறது.தவிர இங்கு தங்கிகொள்ளும்படி முக்கிய கட்சி பிரமுகர்கள் அதிகாரிகள் பலருக்கு சிபாரிசு செய்து அனுப்பிவைப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த விடுதியை கண்காணிக்க வார்டன் மட்டும் போதாது. அடிக்கடி அதிகாரிகள் சென்று சோதனை இட வேண்டும். விடுதி இருக்கும் இடத்தை சுற்றிலும் முக்கிய அதிகாரிகளின் அலுவலகங்கள் இருக்கின்றன.அரசு விடுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படாமல் இருந்தால் அதில் பல குற்றச்செயல்கள் நடை பெற நாமே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது போல ஆகிவிடும்.பல புகார்களின் அடிப்படையில் போலீசார் தரப்பில் இது தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து போலீசாரின் கண்காணிப்பும் இந்த விடுதி மீது தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.