மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பக்கோரி 2–வது நாளாக போராட்டம்


மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பக்கோரி 2–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

புலையன் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பக்கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் 2–வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை மாவட்டங்களில் வாழும் புலையன் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதற்காக பழங்குடி ஆராய்ச்சி மைய இயக்குனரின் ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் வேலு பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் 2–வது நாளாக நேற்றும், கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.

கலெக்டர் பேச்சுவார்த்தை

இதில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் செல்லையா மற்றும் தாண்டிக்குடி, பெரும்பாறை, கொடைக்கானல் பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தமிழக அரசு ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறினர்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் டி.ஜி.வினய், போராட்டக்காரர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளரிடம் பேசி, பதில் அளிப்பதாக தெரிவித்தார். ஆனால், ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பும்வரை செல்ல மாட்டோம் எனக்கூறி, மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.


Next Story