காவிரி ஆற்றில் குடிநீர் குழாய் அருகில் மணல் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


காவிரி ஆற்றில் குடிநீர் குழாய் அருகில் மணல் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:30 AM IST (Updated: 16 Jun 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் காவிரி ஆற்றில் குடிநீர் குழாய் அருகில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் காவிரியாற்று படுகையில் 35 அடி ஆழம் உள்ள குடிநீர் கிணறு அமைத்து தொட்டியம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தொட்டியம் மற்றும் ஏரிகுளம், சித்தூர், கவுத்தரசநல்லூர், தைலாம்பாளையம், தேவதானம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக காவிரி ஆற்றில் போதிய தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. இருந்த போதும் தொட்டியம் பகுதி பொதுமக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் சீராக வழங்கப்பட்டு வந்த நிலையில், கிணற்றின் நீர் மட்டம் குறையத்தொடங்கியது. இதை கருத்தில் கொண்டு காவிரியாற்றிலேயே மேலும் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மணல் அள்ளும் மாட்டு வண்டிகள்

இந்நிலையில் தொட்டியம் காவிரி ஆற்றங்கரையில் மாட்டு வண்டிகள் மணல் எடுக்க பொதுப்பணித்துறையால் தடை செய்யப்பட்டு காவிரி ஆற்றுக்குள் எந்த ஒரு வாகனங்களும் செல்ல முடியாத வகையில் பெரிய குழாய் நட்டு தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாட்டு வண்டிகள் மூலம் அங்குள்ள சுடுகாடு வழியாக பாதை அமைத்து இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட பகுதியில் திருட்டுத்தனமாக விடிய விடிய மணல் அள்ளுகின்றனர்.

ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போன குடிநீர் கிணறு அமைந்துள்ள பகுதியிலேயே மணல் எடுப்பதால் நீர்மட்டம் மேலும் குறைந்து போகும் நிலையும், தொடர்ந்து இப்பகுதியில் மணல் எடுத்து வந்தால் இன்னும் சில நாட்களில் தொட்டியம் பகுதிக்கு குடிநீர் வழங்க முடியாத அபாயமும் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணல் எடுக்கும் மாட்டு வண்டிகள் செல்வதால், மோட்டாருக்கு செல்லும் வயர்கள் அறுந்து அடிக்கடி குடிநீர் மோட்டார் பழுது ஏற்படுகிறது.

கோரிக்கை

இது குறித்து சமூக ஆர்வலர் நடராஜன் என்பவர் கூறுகையில், காவிரி ஆற்றில் மணல் அள்ளுவது சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். தெரிந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கண்டும் காணாததை போல் விட்டு விடுகின்றனர். மேலும் மணல் ஏற்றிச்செல்லும் மாட்டு வண்டிகள் இரவு நேரங்களில் எந்தவித அறிவிப்பு, வெளிச்சம் இல்லாமல் திருச்சி–நாமக்கல் சாலையில் காவிரியாற்றில் இருந்து வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்கள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்போவதாக, கூறினார்.


Next Story