கோவை மத்திய சிறையில் மீண்டும் அடையாள அணிவகுப்பு எஸ்டேட் காவலாளி, ஒருவரை அடையாளம் காட்டினார்


கோவை மத்திய சிறையில் மீண்டும் அடையாள அணிவகுப்பு எஸ்டேட் காவலாளி, ஒருவரை அடையாளம் காட்டினார்
x
தினத்தந்தி 16 Jun 2017 3:45 AM IST (Updated: 16 Jun 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை–கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் வகையில் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடையாள அணிவகுப்பு நடந்தது. இதில் எஸ்டேட் காவலாளி ஒருவரை அடையாளம் காட்டினார்.

கோவை,

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில், மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் மர்ம கும்பல் புகுந்தது. பின்னர் அவர்கள் அங்குள்ள காவலாளிகளான ஓம்பகதூர், கிருஷ்ணபகதூர் ஆகியோரை தாக்கினார்கள். இதில் ஓம்பக தூர் பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணபகதூர் காயத்துடன் உயிர் தப்பினார். மேலும் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 11 பேர் கொண்ட கும்பல் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளியான, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். மீதமுள்ள 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், விபத்தில் சிக்கி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சயனும் ஒருவர். இவர் கனகராஜின் நெருங்கிய நண்பர்.

கோவை சிறையில் அடைப்பு

இந்த கொலை–கொள்ளை வழக்கில் கைதான மனோஜ் சாமியார், சந்தோஷ், திபு, உதயகுமார், குட்டி பிஜின் உள்பட 7 பேர் கோவை மத்திய சிறையிலும், ஜிபின் ஜோய், சம்சீர் அலி ஆகியோர் கேரள மாநிலம் மலப்புரத் தில் உள்ள மஞ்சேரி சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? பங்களாவில் இருந்து என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது? என்பது குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளை அடை யாளம் காணும் வகையில் கடந்த மாதத்தில் அடையாள அணிவகுப்பும் நடந்தது.

மீண்டும் அடையாள அணிவகுப்பு

இந்த நிலையில், மீண்டும் அடையாள அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, கோத்தகிரி மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதர், மற்றும் போலீஸ் உயர் அதிகாரி கள் ஆகியோர் கோவை வந்தனர். காவலாளி கிருஷ்ணபகதூரும் அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறைக்கு சென்றனர்.

இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 7 பேரும் அடையாள அணிவகுப்புக்காக சிறைக்குள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அப்போது குட்டி பிஜினை காவலாளி கிருஷ்ணபகதூர் தெளிவாக அடையாளம் காட்டினார். இவர் தான் அந்த கும்பலுடன் வந்தார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அடையாள அணிவகுப்பின் போது சிறை சூப்பிரண்டு செந்தில்குமாரும் உடன் இருந்தார்.

சென்னைக்கு அனுப்பி வைப்பு

இதற்கிடையே, சம்பவம் நடந்த எஸ்டேட்டில் பதிவான கைரேகைகள், கைதான குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிடும்போது, அதில் 3 பேரின் கைரேகைகள் மட்டுமே சரியாக இருந்ததாக கூறப்படு கிறது. எனவே இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கைதானவர்களின் கைரேகைகளும், எஸ்டேட்டில் பதிவான கைரேகைகளையும் ஆய்வுக்காக சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை ஓரிரு நாட்களுக்குள் கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் எஸ்டேட் ஊழியர்களிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.


Next Story