தடை காலம் முடிந்து கடலுக்குச் சென்று திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றம்


தடை காலம் முடிந்து கடலுக்குச் சென்று திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 16 Jun 2017 4:15 AM IST (Updated: 16 Jun 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

61 நாள் தடைகாலம் முடிந்து கடலுக்குச்சென்று திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் இறால் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் எதிர்பார்த்த அளவு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமேசுவரம்,

கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய 61 நாள் தடை காலம் முடிவடைந்ததையடுத்து, ராமேசுவரம் மீனவர்கள் நேற்று முன்தினம் (14-ந் தேதி) 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக புறப்பட்டுச்சென்றனர்.

மீன்பிடித்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பல வகை மீன்களுடன் ராமேசுவரத்திற்கு கரை திரும்பினர்.

தடை காலத்தின்போது, வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் துறைமுக கடற்கரை பகுதி, நேற்று மீனவர்கள் மீன்பிடித்து கரை திரும்பியதால் களை கட்டி இருந்தது. அவர்களின் படகுகளில் சராசரியாக இறால் மீன்கள் 80 கிலோவில் இருந்து, 120 கிலோ வரை கிடைத்திருந்தன. இதுதவிர நண்டு 20 கிலோ வரையிலும், கணவாய் மீன் 50 கிலோ வரையிலும் கிடைத்திருந்தன. சங்காயம் போன்ற மீன்கள் 500 கிலோவிலிருந்து 1 டன் வரையிலும் கிடைத்தன.

கரை திரும்பியதும், மீனவர்கள் இறால் மீன்களை பிரித்தெடுப்பதிலும், வியாபாரிகளிடம் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கொடுப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

ஏமாற்றம்

எனினும், இறால் மீன்கள் உள்பட அனைத்து வகை மீன்களும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காததால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜா கூறியதாவது;-

கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு இறால் மீன்கள் மிக மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. அவற்றையும் மிகக்குறைந்த விலைக்கே கம்பெனிக்காரர்கள் வாங்கியுள்ளனர். தடை காலம் முன்பு வரை 600-க்கு விலைபோன இறால் மீன், தற்போது 1 கிலோ ரூ.450 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இறால் மீனின் விலையை இடைத்தரகர்கள் மூலம் கம்பெனிக்காரர்கள் குறைத்து விலை நிர்ணயம் செய்து விட்டனர். இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

அதேபோல் கணவாய், நண்டு, சங்காயம் மீன்களும் குறைவாகவே கிடைத்துள்ளன. மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீனின் விலையை அரசே நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஒட்டு மொத்த மீனவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.

நாட்டுப்படகுகள்

அது போல மீன்பிடி தடை கால நாட்களில் என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கும் வரும் ஆண்டில் இருந்து மத்திய-மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும்.

தடை காலத்தின் போது, என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதால் தான், தற்போது மீன்கள் குறைவாக கிடைத்துள்ளன. எனவே வரும் ஆண்டில் இருந்து என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளையும், தடைகாலத்தில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாம்பன்

இதே போல் பாம்பனில் இருந்தும் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று பகலில் கரை திரும்பினர்.

இதில் ஒவ்வொரு படகிலும் இறால் மீன்கள் 100 கிலோ வரை கிடைத்திருந்தன. ஆனால் இறால் மீனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக, பாம்பன் மீனவர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.


Next Story