அண்ணன் முகத்தில் மிளகுபொடியை தூவி ஆசிரியை காரில் கடத்தல் 4 பேர் கைது


அண்ணன் முகத்தில் மிளகுபொடியை தூவி ஆசிரியை காரில் கடத்தல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2017 4:45 AM IST (Updated: 16 Jun 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அண்ணன் முகத்தில் மிளகுபொடியை தூவி ஆசிரியையை காரில் கடத்தி சென்ற தஞ்சையை சேர்ந்த முறைமாப்பிள்ளை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் என்.எம்.கே.காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகள் தனலட்சுமி (வயது 24). இவர் திருச்சி கலெக்டர் அலுவலக சாலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தனலட்சுமியை தினமும் காலையில் அவருடைய அண்ணன் முத்துக்குமார் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு கொண்டு விடுவதும், மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவதும் வழக்கம். அதன்படி நேற்று காலை வீட்டில் இருந்து முத்துக்குமார், தனலட்சுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விடுவதற்காக புறப்பட்டு சென்றார்.

காலை 8 மணியளவில் என்.எம்.கே. காலனி மெயின்ரோட்டில் உள்ள ஒரு மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று முத்துக்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் தடுமாற்றத்துடன் ‘பிரேக்‘ போட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த காரில் டிரைவர் உள்பட 4 பேர் இருந்தனர்.

மிளகுபொடி தூவினர்

அப்போது காரில் இருந்து 3 பேர் மட்டும் கீழே இறங்கினார்கள். அதில் ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த மிளகுபொடியை முத்துக்குமார் முகத்தில் தூவினார். அப்போது மிளகுபொடி தனலட்சுமியின் கண்களிலும் விழுந்தது. இதில் 2 பேருக்கும் கண்எரிச்சல் ஏற்பட்டு சாலையில் உட்கார்ந்து விட்டனர். இதையடுத்து மிளகு பொடியை தூவியவரும், அவருடன் வந்திருந்த 2 பேரும் சேர்ந்து தனலட்சுமியை தர, தரவென இழுத்து வலுக்கட்டாயமாக தூக்கி காரில் ஏற்றினர்.

தனலட்சுமி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். ஆனால் கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று மறைந்து விட்டது. மிளகுபொடி தூவியதால் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் சிறிது நேரத்திற்கு பிறகு கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்திற்கு சென்று இதுபற்றி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.

முறைமாப்பிள்ளை

தனலட்சுமிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேல திருப்பந்துருத்தியை சேர்ந்த தனலட்சுமியின் தாய்மாமன் மகனும், முறைமாப்பிள்ளையான கஜேந்திரன்(30) என்பவர் தனலட்சுமியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். இதற்கு தனலட்சுமி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கஜேந்திரனும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து தனலட்சுமியை கடத்தி சென்றிருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் கட்டிட மேஸ்திரியான கஜேந்திரன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை தனலட்சுமியின் வீட்டிலேயே குடியிருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தனிப்படை போலீசார் தனலட்சுமியை மீட்கவும், கடத்தியவர்களை பிடிக்கவும் மேலதிருப்பந்துருத்திக்கு காரில் விரைந்தனர்.

கைது

இந்நிலையில் கஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போது திருவாரூர் மாவட்டம் திருவிடைவாசல் கொரடாச்சேரியை காட்டியது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். மதியம் 1 மணியளவில் கொறடாசேரி வழியாக சென்ற அந்த காரை போலீசார் வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்த தனலட்சுமியை மீட்டனர். மேலும் காரில் இருந்த திருச்சி என்.எம்.கே. காலனியை சேர்ந்த துவாரகன்(21), மயிலாடுதுறை கூறைநாட்டை சேர்ந்த முகமது நசீர்(33), தஞ்சாவூர் மாவட்டம் மேல திருப்பந்துருத்தியை சேர்ந்த அரவிந்த்(24) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அப்போது கஜேந்திரன் தப்பியோடினார். இதையடுத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கஜேந்திரனை விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கஜேந்திரன் உள்பட 4 பேர் சேர்ந்து தனலட்சுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

பின்னர் தனலட்சுமியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கஜேந்திரன் உள்பட 4 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கடத்தல் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர். சினிமாவில் நடப்பது போன்று நேற்று காலை பள்ளி ஆசிரியை காரில் கடத்தி சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story