சாதி சான்றிதழ் இல்லாததால் மாணவனை பிளஸ்–1 வகுப்பில் சேர்க்க மறுப்பு


சாதி சான்றிதழ் இல்லாததால் மாணவனை பிளஸ்–1 வகுப்பில் சேர்க்க மறுப்பு
x
தினத்தந்தி 16 Jun 2017 4:00 AM IST (Updated: 16 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

சாதி சான்றிதழ் இல்லாததால் மாணவனை பிளஸ்–1 வகுப்பில் சேர்க்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார். இதனால் மாணவனின் தந்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் செய்தார்.

திருப்பூர்,

திருப்பூர் பிச்சம்பாளையம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவன் பிளஸ்–1 வகுப்பில் சேர அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றுள்ளான். சாதிசான்றிதழ் இல்லாததால் அந்த மாணவனை பள்ளியில் சேர்க்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார். ஆனால் சாதிசான்றிதழ் வாங்க விரும்பாத மாணவனின் தந்தை, அந்த மாணவனை அழைத்துக்கொண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இல்லாததால் அவருடைய நேர்முக உதவியாளரிடம் புகார் தெரிவித்தார்.

அப்போது, என்னுடைய மகனை பிளஸ்–1 வகுப்பில் சேர்க்க சாதி சான்றிதழ் கேட்கிறார்கள். ஆனால் நான் இது வரை சாதி சான்றிதழ் வாங்கியதில்லை. எனக்கு சாதி சான்றிதழ் வாங்க விருப்பமில்லை. சாதிக்காக கிடைக்கக்கூடிய சலுகைகள் எதுவும் எங்களுக்கு வேண்டாம். அதே போல அரசு வழங்கும் சலுகைகளில் புத்தகங்கள் தவிர வேறு எதுவும் வேண்டாம். கல்வி மட்டும் போதும் என்று உறுதியளித்து கையொப்பமிட்டிருந்த கடிதம் ஒன்றை அவரிடம் கொடுத்தார்.

எஸ்.எஸ்.எல்.சி. மாற்று சான்றிதழ்

அதை படித்துப்பார்த்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர், மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மாற்று சான்றிதழை வாங்கி பார்த்தார். அதில் சாதி என்ற இடத்தில் எதுவும் எழுதாமல் காலியாக விடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கடிதத்தில் இந்த மாணவனுக்கு உங்கள் பள்ளியில் சேர்க்கை வழங்கலாம் என்று எழுதி கொடுத்து, அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து அய்யங்காளிபாளையம் அரசுப்பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்ட போது, அந்த மாணவனை பள்ளியில் சேர்த்து கொள்ளும்படி முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் எழுதி அனுப்பி உள்ளார். அந்த விண்ணப்பத்தை வாங்கி வைத்துள்ளேன். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து விட்டு மாணவரை பள்ளியில் சேர்த்துக்கொள்வோம்” என்றார்.


Next Story