ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பின்னலாடை தொழில் நல்ல வளர்ச்சி அடையும்


ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பின்னலாடை தொழில் நல்ல வளர்ச்சி அடையும்
x
தினத்தந்தி 16 Jun 2017 3:26 AM IST (Updated: 16 Jun 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பின்னலாடை தொழில் நல்ல வளர்ச்சி அடையும் என்று கருத்தரங்கில் ஆடிட்டர் சத்யகுமார் பேசினார்.

திருப்பூர்,

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி. வரி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்குக்கு வந்திருந்தவர்களை இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட முன்னாள் தலைவர் வேலுசாமி வரவேற்றார். கலால் வரி திருப்பூர் உதவி கமி‌ஷனர் சுப்பிரமணியன், ஆடிட்டர் ராமநாதன் ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து ஆடிட்டர் சத்யகுமார் பேசியதாவது:–

ஜி.எஸ்.டி வரி வெளிநாடுகளில் ஏற்கனவே உள்ளது. ஜி.எஸ்.டி.யில் 2 வகையான வரி விதிப்பு 5 நாடுகளில் இருக்கிறது. அதில் இந்தியாவும் ஒன்று. முற்றிலும் கணினி தொழில்நுட்பத்தால் கையாள உள்ளதால் ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ய முடியாது. இந்த வரியால் பொருட்களின் விலை குறையும். இந்தியாவில் 4 விகிதத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஏழை மக்கள் இந்த வரி விதிப்பால் பயன்பெறுவார்கள். குறிப்பாக பின்னலாடை தொழில் நல்ல வளர்ச்சி அடையும்.

ஜாப்ஒர்க் தொழில்

ஜாப்ஒர்க் தொழிலுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஆடைகள் தயாரிப்பு தொழில் சேர்க்கப்படாமல் உள்ளது. இதனால் ஆடை தயாரிப்புக்கான ஜாப்ஒர்க் தொழிலுக்கு எவ்வளவு வரி விதிப்பு என்பதில் பின்னலாடை துறையினருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. வருகிற 18–ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஆடைகள் தயாரிப்பு ஜாப்ஒர்க் தொழிலுக்கான வரி விதிப்பு தெளிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி செலுத்தியவர்கள் உள்ளீட்டு வரி வரவு பெற முடியும் என்பதால் அனைவரும் வரி செலுத்துவதற்கு முன்வருவார்கள். வசதிபடைத்தவர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்தரங்கில் பின்னலாடை தொழில்துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story