மாயமான மணப்பெண் போலீசில் ஆஜர் திருமணம் பிடிக்காததால் பாட்டி வீட்டுக்கு சென்றதாக வாக்குமூலம்


மாயமான மணப்பெண் போலீசில் ஆஜர் திருமணம் பிடிக்காததால் பாட்டி வீட்டுக்கு சென்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 16 Jun 2017 3:43 AM IST (Updated: 16 Jun 2017 3:43 AM IST)
t-max-icont-min-icon

தீவட்டிப்பட்டி அருகே மாயமான மணப்பெண்ணை கண்டுபிடித்த அவருடைய பெற்றோர் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தினர்.

ஓமலூர்,

திருமண ஏற்பாட்டில் விருப்பம் இல்லாததால் பாட்டி வீட்டுக்கு சென்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.

மணப்பெண் மாயம்

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி கலர்காடு பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் 10–ம் வகுப்பு வரை படித்து விட்டு தீவட்டிப்பட்டியில் உள்ள ஒரு ‘பேன்சி‘ கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், சேலம் திருமலைகிரி பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற இருந்தது.

இளம்பெண்ணின் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில், கடந்த 13–ந் தேதி திடீரென மணப்பெண் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

திருமண ஏற்பாட்டில் விருப்பம் இல்லை

இந்த நிலையில் அந்த இளம்பெண் சேலத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவரது பெற்றோர் அங்கு சென்று அந்த பெண்ணை அழைத்து வந்து தீவட்டிப்பட்டி போலீசில் நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அந்த பெண், தனக்கு நடந்த திருமண ஏற்பாட்டில் விருப்பம் இல்லாததால் பாட்டி வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஓமலூர் கோர்ட்டில் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். அங்கு அந்த பெண் பெற்றோருடன் செல்வதாக கூறியதன் பேரில் அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story