தன்னலம் கருதாமல் அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் கலெக்டர் சம்பத் வேண்டுகோள்


தன்னலம் கருதாமல் அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும்  கலெக்டர் சம்பத் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Jun 2017 3:55 AM IST (Updated: 16 Jun 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

‘‘தன்னலம் கருதாமல் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்‘‘ என்று ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட கலெக்டர் சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.

சேலம்,

உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடந்தது. அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ் தலைமை தாங்கினார். ஆஸ்பத்திரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ரவீந்திரன் வரவேற்றார். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் வளர்மதி, துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட கலெக்டர் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அதிகமுறை ரத்த தானம் செய்தவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

வாழ்வை பாதுகாக்கும்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 14–ந் தேதி உலக ரத்த கொடையாளர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தன்னலம் இன்றி மற்றவரின் உயிர் காக்கும் நோக்குடன் மற்றவர்களின் நல்வாழ்விற்காக ரத்த தானம் வழங்கும் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. அதிகபடியான ரத்த சேகரிப்பு அதிக பேரின் வாழ்வை பாதுகாக்கும். குறிப்பாக சொல்ல போனால் பலரின் உயிர்களை காப்பாற்ற உதவும்.

இதனால் தன்னலம் கருதாமல் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். நான் வருடத்திற்கு இரண்டு முறை ரத்த தானம் செய்து வருகிறேன். 2016–2017–ம் ஆண்டில் நமது சேலம் மாவட்டத்திலுள்ள அரசு ரத்த வங்கிகளில் 147 முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் 17,452 யூனிட் ரத்தம் பெறப்பட்டு பலரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.

உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்

இந்த நாளில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி மேலும் பல ரத்த கொடையாளர்கள் ரத்த தானம் வழங்க முன்வர வழிவகுக்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றும் சம்மேளனத்துடன் இணைந்து பாதுகாப்பான ரத்தம் கிடைக்கப்பெறவும், இளைஞர்களிடையே தன்னார்வ ரத்த தானத்தினை ஊக்குவிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் சம்பத் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒரு பெண் போலீஸ் உள்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ரத்த கொடையாளர்கள் 85 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



Next Story