மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அரிசி மண்டிகள், கடைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 78 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பிளாஸ்டிக் அரிசி எதுவும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:– மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் அரிசிகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதுவரை அப்படி எதுவும் கண்டறியப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு அரிசி உணவு மாதிரிகள் எடுத்து, கிண்டி, சென்னை பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் முடிவில், அது பிளாஸ்டிக் அரிசி இல்லையெனவும், சாதாரணமாக உட்கொள்ள ஏதுவான அரிசி எனவும் தெரியவந்தது.
புகார் தெரிவிக்கலாம்மேலும் பொதுமக்களுக்கு அரிசி மீது சந்தேகம் இருந்தால் அதை தண்ணீரில் போட்டு பார்க்கவும். அப்படி செய்தால் பிளாஸ்டிக் அரிசி மிதக்கும். சாதாரண உட்கொள்ளும் அரிசி மிதக்காது. அரிசியை கொதிக்க வைக்கும்போது பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் தண்ணீரில் வெண் படலம் உண்டாகும். சாதாரண அரிசியில் அவ்வாறு உண்டாகாது.
தீயில் போட்டு பரிசோதனை செய்து பார்த்தால் பிளாஸ்டிக் அரிசி இளகி உருகும். மேலும் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் சிறிது அரிசியை போட்டால் அது கரையும். சாதாரணமாக உட்கொள்ளும் அரிசி கரையாது. இவ்வாறு செய்து பார்த்தால் பிளாஸ்டிக் அரிசியை பொதுமக்கள் கண்டறியலாம். மேலும் இதுகுறித்து ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் புகார்களை உணவு பாதுகாப்புத்துறையின் தொலைபேசி எண் 94440 42322 என்ற எண்ணிலும், அல்லது 04343 – 230102 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.