கிருஷ்ணகிரியில் நாளை 25–வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்கம்
கிருஷ்ணகிரியில் நாளை 25–வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கப்பட்டு 24 நாட்கள் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு 25–வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்குகிறது. 24 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அரசு சார்பில் 36 துறைகளின் 50 அரங்குகளும், தனியார் சார்பில் 80 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக கேளிக்கை அரங்குகள், கடைகள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் இடம் பெறுகிறது. அத்துடன் நாள்தோறும் பள்ளி கல்வித்துறை சார்பில் நிகழ்ச்சிகள், உள்ளூர் கலைஞர்களின் இன்னிசை கச்சேரிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் நடைபெற உள்ளது.
கலெக்டர் ஆய்வுகுறிப்பாக விடுமுறை நாட்களில் பிரபலமான கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 24 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியினை காண ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் அமைக்கப்படும் அரங்குகள் மற்றும் விளையாட்டு சாதனங்கள் அமைக்கும் பணியினை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடிருந்தனர்.