ஸ்ரீமுஷ்ணம் அருகே, மணல் குவாரியை மூடக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி 5 கிராம மக்கள் போராட்டம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் குவாரியை மூடக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி 5 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே மதகளிர்மாணிக்கம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் கடந்த 12–ந் தேதி அரசு மணல் குவாரி திறக்கப்பட்டது. அன்று முதல் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரிகளில் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த குவாரியை மூடக்கோரி மதகளிர்மாணிக்கம், கீரனூர், சக்கரமங்கலம், வல்லியம், எசனூர், மருங்கூர் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
வீடுகளில் கருப்புக்கொடிஇந்த நிலையில் வெள்ளாற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை உடனடியாக மூடக்கோரி மதகளிர்மாணிக்கம், கீரனூர், சக்கரமங்கலம், வல்லியம், மருங்கூர் ஆகிய 5 கிராம மக்கள் தங்களுடைய வீடுகளிலும், மின்கம்பங்கள், மரங்களிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது சட்டையில் கருப்புச் சின்னம் அணிந்திருந்தனர்.
இந்த போராட்டம் குறித்து மதகளிர்மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:–
மணலை சுரண்டிவிட்டார்கள்கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து கூடலையாத்தூர் வரை வெள்ளாற்றில் இருந்த இயற்கை வளமான மணலை கடந்த 15 ஆண்டுகளாக சுரண்டிவிட்டார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. கருவேப்பிலங்குறிச்சி, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 400 ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன. பொதுவாக இந்த பகுதியில் 40 அடி ஆழ்துளை கிணறு அமைத்தாலே தண்ணீர் வரும். ஆனால் தற்போது 200 முதல் 400 அடி வரை ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் இல்லை. இதன்காரணமாக இந்த பகுதியில் பயிர் சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருவேப்பிலங்குறிச்சி பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக வெள்ளாற்றில் இயங்கி வந்த மணல் குவாரி மூடப்பட்டது.
ஆதாரத்துடன் கலெக்டரிடம் மனுஇந்த நிலையில் மதகளிர்மாணிக்கம் கிராமத்தையொட்டி உள்ள வெள்ளாற்றில் அரசே மணல் குவாரி அமைத்திருப்பது வேதனை அளிக்கிறது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. ஏற்கனவே மழை பெய்யாததால் விளைநிலங்கள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது.
மணல் குவாரியால் பாதிக்கப்பட்ட விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து, அதனை புகைப்படம் எடுத்து வருகிறோம். இந்த புகைப்பட ஆதாரத்துடன் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்போம். அதன்பிறகும் மணல் குவாரியை மூடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.