மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்பதற்கான விலங்கு விற்பனை தடையை வாபஸ்பெற வேண்டும்


மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்பதற்கான விலங்கு விற்பனை தடையை வாபஸ்பெற வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2017 5:26 AM IST (Updated: 16 Jun 2017 5:25 AM IST)
t-max-icont-min-icon

மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்பதற்காக போடப்பட்ட விலங்கு விற்பனை தடையை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிக்கை ஒன்றை படித்தார். அதன் விவரம் வருமாறு:–

சட்டத்திற்கு புறம்பானது

மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மாதம் 23–ந்தேதி விலங்குகளின் வதை தடுப்பு (கால்நடை விற்பனை) விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த கால்நடை விற்பனை தொடர்பான விதிமுறைகள் கால்நடை வளர்ப்போரின் உரிமையை பறிப்பதாகும். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பானதாக உள்ளது.

இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு அவர்கள் விரும்பும் உணவை உண்ணுவதற்கும், அவர்கள் விரும்பும் மதத்தை கடைப்பிடிப்பதற்கும் மற்றும் விரும்பும் ஆடைகளை உடுப்பதற்கும் தனிமனித சுதந்திரம் உண்டு. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. இந்த உரிமையை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்து இருக்கிறது.

கட்டுப்படுத்த முடியாது

ஆகவே மத்திய அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டு மாட்டுகறி, ஒட்டக கறி, எருமை கறி போன்றவைகளை உண்ணக்கூடாது என்பதை ஏற்கமுடியாது. அதுமட்டுமில்லாமல், புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்தது. நம் மாநில மக்கள் உண்ணும் உணவிற்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது.

குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற சமுதாயத்தினர் மாட்டுக்கறியை தங்களுடைய உணவாக சாப்பிடுகின்றனர். முதிர்ச்சி அடைந்த நோய்வாய்ப்பட்ட மாடுகளை விவசாயிகளால் பராமரிக்க முடியாமல் வீதியில் திரியவிடும் நிலை ஏற்பட்டு, அதனால் அவற்றின் மூலம் உயிர்க்கொல்லி நோய்களான காசநோய், தொண்டை அடைப்பான், கருச்சிதைவு போன்ற நோய்கள் மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் ஏற்பட்டு பேராபத்தையும், அழிவையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

வாபஸ் பெற வேண்டும்

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து புதுவை மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர். எனவே கால்நடை விற்பனை தடை விதிமுறைகளை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடந்த 7–ந்தேதி கடிதம் அனுப்பியுள்ளேன். ஆகவே மத்திய அரசு அறிவித்த மாடுகள், எருமைகள், ஒட்டகம் போன்றவை உள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்வதற்கான தடையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று இந்த பேரவை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.


Next Story