அரசு கலைக்கல்லூரிகளில் 794 சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு சட்டசபையில் தகவல்


அரசு கலைக்கல்லூரிகளில் 794 சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு சட்டசபையில் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2017 5:35 AM IST (Updated: 16 Jun 2017 5:35 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 794 சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:–

விடைத்தாள் மதிப்பீடு

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வல்லுனர்கள் உருவாக்கப்பட உள்ளனர். மைசூர் பிராந்திய கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கையாள பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொதுவினாத்தாள் மூலம் வாராந்திர தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு விடைத்தாள்கள் அந்தந்த ஆசிரியர்களே மதிப்பீடு செய்யும் நடைமுறையை மாற்றி விடைத்தாள் மற்ற ஆசிரியர்கள் மதிப்பிடும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி வெளியிட்டு மின்னணு பாடப்பொருள் பிரதி எடுக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 1,140 சேர்க்கை இடங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்த நிலையில் இதுவரையில் 794 இடங்களுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. புதுவை பல்கலைக்கழகத்தில் இருந்து மேலும் மீதமுள்ள 346 சேர்க்கை இடங்களுக்கான ஒப்புதல் பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரைக்கால் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி. வேதியியல், கணிதம், கணினி அறிவியல் படிப்புகளை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் இடஒதுக்கீட்டை பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுவை என்ஜினீயரிங் கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த தேவையான நிர்வாக கட்டிடங்கள், வகுப்பறைகள் ரூ.17.5 கோடி செலவில் இந்த ஆண்டில் கட்டி முடிக்கப்படும். பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ரூ.1.58 கோடி செலவில் பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணி இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.


Next Story