அரியூரில் ரெயில்வே மேம்பால பணியால் நெரிசல் மாற்றுப்பாதை அமைக்கக்கோரி மறியல்
வேலூர் அருகே அரியூர் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் வாகனங்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை ஏற்படுத்தி தராததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வேலூர்,
வேலூர் அருகே அரியூர் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் வாகனங்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை ஏற்படுத்தி தராததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கண்டித்தும் மாற்றுப்பாதை அமைக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொரப்பாடி எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவ. இனமுதல்வன், நிர்வாகிகள் விஜயபாரதி, அமுல்ராஜ், ரஞ்சித்குமார் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்த பாகாயம் இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் மறியலை கைவிடும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படாததால் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.