காங்கேயம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


காங்கேயம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:45 AM IST (Updated: 17 Jun 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர்,

காங்கேயம் மற்றும் பங்காம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைக்கு எதிராக பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து காங்கேயம் தாலுகா, நிழலி கிராமம் பங்காம்பாளையம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

போராட்டம் நடத்தப்படும்

எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை தொடங்குவதற்கான கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் பஸ் வசதி இல்லாத காரணத்தால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் டாஸ்மாக் கடை அமைய இருக்கும் பகுதியின் வழியாக நடந்து சென்று வருகின்றனர். தற்போது இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மாணவ, மாணவிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், இதன் அருகில் புதிய குடியிருப்புகளும் உருவாகி வருகிறது. எனவே டாஸ்மாக் கடை அமைப்பதற்காக நடைபெற்று வரும் கட்டிட பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாங்கள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதன் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story