காங்கேயம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை–பணம் கொள்ளை
காங்கேயம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை–பணம் கொள்ளை மர்ம ஆசாமிகள் கைவரிசை
காங்கேயம்,
காங்கேயம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை–பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:–
சின்ன அண்ணமா£ர் கோவில்திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி கிராமத்தில் சின்ன அண்ணமார்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணி(வயது 50) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார்.
இந்த கோவிலில் மாலையில் பூஜை முடிந்ததும் தினமும் மாலையில் கோவிலை பூட்டிவிட்டு, காலை 8 மணிக்கு கோவிலை திறப்பது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் மாலை கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் கோவிலை திறக்க சென்றார்.
கோவிலின் பூட்டு உடைப்புஅப்போது, கோவிலின் முன்பகுதியில் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு உண்டியல் மற்றும் சாமி சன்னதியில் இருந்த கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி காங்கேயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பூமிபாலகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இரவு நேரத்தில் கோவிலின் இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் சிலர் சென்றதும், அவர்கள் அங்கிருந்த உண்டியலை கடப்பாரையால் நெம்பி ஓட்டை போட்டு உள்ளே இருந்த சுமார் 50 ஆயிரத்தையும் கொள்ளை அடித்துள்ளது தெரியவந்தது.
நகை–பணம் கொள்ளைஅத்துடன், கோவிலில் சாமி சன்னதி கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று அங்கு சாமிக்கு அணிவிக்கும் 2 பவுன் தங்க கிரீடம், ஒரு பவுன் சங்கிலி உள்ளிட்ட சாமி நகைகள் மற்றும் சுமார் 4 கிலோ வெள்ளி வேல் மற்றும் பூஜை பொருட்கள், அங்கிருந்த பணம் ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. கொள்ளை அடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும்.
கோவிலில் இரவு நேரத்தில் காவலாளி இருக்க மாட்டார்கள். கண்காணிப்பு கேமராவும் அங்கு இல்லை. மேலும் இந்த கோவில் அருகில் குடியிருப்புகளோ, ஆள் நடமாட்டமோ இல்லாத பகுதியாகும். பகலில் மட்டுமே பக்தர்கள் வந்து செல்வார்கள் என்பதால், கொள்ளையர்களுக்கு அது வசதியாகி விட்டது என்று கூறப்படுகிறது.
பரபரப்புஇதை தொடர்ந்து திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கோவிலில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் பூட்டை உடைத்து நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.