வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலம் பெயர் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும்


வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலம் பெயர் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:30 PM GMT (Updated: 16 Jun 2017 7:49 PM GMT)

வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலம் பெயர் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும், அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தல்

விருதுநகர்,

ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளம்வாக்காளர்களை ஊக்குவிக்க வேண்டும் எனஅரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அனைத்துக்கட்சி

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பிழைகளை நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக அதிக அளவில் இளைய வாக்காளர்களை, குறிப்பாக 18 முதல் 21 வயதிற்குட்பட்டவர்களை பட்டியலில் சேர்க்கும் பொருட்டு அடுத்த மாதம் (ஜூலை) முழுவதும் சிறப்பு இயக்கம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கிய முத்துக்குமரன், சிறப்பு இயக்கத்தில் இளம் வாக்காளர்களை ஆன்லைன் மூலம் அதிக அளவில் சேர்க்க தக்க முயற்சிகள் மேற்கொள்ளும்படி அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களை கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் பேசுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கல்லூரி

அனைத்து தாசில்தார்களும் தங்களது தாலுகாவுக்குட்பட்ட கல்லூரிகளில் 5 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு பயிற்சி கொடுத்து அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பயிலும் 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மாற்றுத்திறனாளி அலுவலரிடம் இருந்து 18 வயது பூர்த்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் பட்டியல் பெற்று அவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து, விடுபட்டவர்களை சேர்ப்பதற்கும், வாக்காளர்களின் வண்ண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து மேம்படுத்துவதற்கும் கோட்டாட்சியர்களும் தாசில்தார்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

சிறப்பு முகாம்

1.1.2017 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியிலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் அரசு இ-சேவை மையங்கள், இன்டர் நெட்மையம், தங்களது செல்பேசியில் ஆன்லைன் மூலம் TN Election என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்துகொள்ளலாம்.

இந்த சிறப்பு இயக்க காலத்தில், 9 மற்றும் 23 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க, படிவம் 6 விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கோட்டாட்சியர்கள், தாசில் தார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் நேரில் அளிக்கலாம். நேரில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்புநாதன், அனைத்து கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

Next Story