பொள்ளாச்சி– கோவை 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைத்தால் பொதுமக்களுடன் சேர்ந்து போராடுவேன்


பொள்ளாச்சி– கோவை 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைத்தால் பொதுமக்களுடன் சேர்ந்து போராடுவேன்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:45 PM GMT (Updated: 2017-06-17T01:48:59+05:30)

பொள்ளாச்சி– கோவை 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைத்தால் பொதுமக்களுடன் சேர்ந்து போராடுவேன் மகேந்திரன் எம்.பி. பேட்டி

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி– கோவை 4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி அமைத்தால் பொதுமக்களுடன் சேர்ந்து போராடுவேன் என்று மகேந்திரன் எம்.பி. கூறினார்.

4 வழிச்சாலையில் சுங்கச்சாவடி

பொள்ளாச்சி–கோவை இடையே 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆச்சிப்பட்டியில் இருந்து ஈச்சனாரி வரை 26.85 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.414 கோடியே 90 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்த வழித்தடத்தில் கிணத்துக்கடவில் 2¼ கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலமும், முள்ளுப்பாடி ரெயில்வே கேட்டில் உயர்மட்ட மேம்பாலமும் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே ஏழுர் பிரிவில் சுங்கச்சாவடி அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஏற்பாடுகள் செய்து வந்தது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுங்கச்சாவடி அமைத்தால் கூடுதலாக அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்த வேண்டிய இருக்கும். மேலும் சுங்கச்சாவடியால் விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே பொள்ளாச்சி– கோவை ரோட்டில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

எம்.பி. ஆய்வு

இந்த நிலையில் ஆச்சிப்பட்டியில் இருந்து ஈச்சனாரி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை மகேந்திரன் எம்.பி. நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முள்ளுப்பாடி ரெயில்வே கேட் மற்றும் கிணத்துக்கடவில் மேம்பாலம் கட்டும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் கிணத்துக்கடவு அருகே ஏழுர் பிரிவில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் அங்கு வந்து எம்.பி.யிடம் இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் கண்டிப்பாக இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட மாட்டாது என்றார்.

சாலை விரிவாக்க பணிக்கு மட்டும் சிறிது அளவு நிலம் கையகப்படுத்த வேண்டிய இருக்கும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்கு நிலத்தை கொடுக்க தயார். ஆனால் சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களுடன் சேர்ந்து போராடுவேன்

ஆய்வுக்கு பின் மகேந்திரன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இருந்து ஈச்சனாரி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே நிலம் கையகப்படுத்தாமல் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவது இங்கு தான். கோவை ரோட்டில் சுங்கச்சாவடி கண்டிப்பாக அமைக்கப்படாது. சாலை பணி தனியார் பங்களிப்புடன் நடந்தால் மட்டுமே சுங்கச்சாவடி அமைக்கலாம். மேலும் தற்போது 26.85 கிலோ மீட்டர் தூரத்துக்கு தான் பணிகள் நடைபெறுகிறது.

அதுவும் மத்திய அரசின் சிறப்பு நிதியில் இருந்து பணிகள் நடக்கிறது. சுங்கச்சாவடி அமைக்காமல் இருக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இதையும் மீறி சுங்கச்சாவடி அமைத்தால் பொதுமக்களுடன் சேர்ந்து வீதிக்கு வந்து போராடவும் தயாராக உள்ளேன். பணிகளை இன்னும் ஒரு ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விரைவில் ரெயில் இயக்கப்படும்

பொள்ளாச்சி–போத்தனூர் இடையே அகல ரெயில்பாதை பணிகள் முடிந்து விட்டது. ரெயில் இயக்குவது குறித்து மத்திய ரெயில்வே துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் ரெயில் இயக்கப்படும். ஏற்கனவே இயங்கிய ரெயில்கள் மட்டுமல்லாது, கூடுதலாகவும் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் உதய சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) கற்பகம், தாசில்தார் பொன்னம்மாள், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகருப்பண்ணசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் டி.எல். சிங், சுப்பிரமணியம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story