‘சபாநாயகரின் இருக்கையும் விக்கிரமாதித்தன் நாற்காலியும்’ வைத்திலிங்கம் விளக்கம்
சபாநாயகரின் இருக்கை விக்கிரமாதித்தனின் நாற்காலி போன்றது என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார்.
புதுச்சேரி,
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அனைவருக்கும் நன்றி தெரிவித்து சபாநாயகர் வைத்திலிங்கம் பேசியதாவது:–
மக்களுக்காக பேசினார்கள்இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் 23 நாட்கள் நடந்துள்ளது. இதில் 623 உடுக்குறியிட்ட வினாக்களுக்கும், 204 உடுக்குறியிடா வினாக்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது. 2 கவன ஈர்ப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
2 அரசினர் சட்ட முன்வரைவுகளும், ஒரு நிதி மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. மேலும் தணிக்கை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த 23 நாட்களிலும் எம்.எல்.ஏ.க்கள் யாரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அனைவரும் மக்களுக்காகத்தான் பேசினார்கள்.
சிறிது வேகம்எனவே சட்டமன்ற உறுப்பினர்களை வெளியில் உள்ளவர்கள் குறைத்து பேசுவதை நாம் ஏற்கமுடியாது. புதிதாக வந்துள்ள எம்.எல்.ஏ.க்களும் எதிர்பார்ப்புகளுடன் பேசினார்கள். அதனால் அவர்களது பேச்சில் சிறிது வேகம் இருந்தது. சிலர் பக்குவப்பட்டுவிட்டனர். இந்த சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.
குறிப்பாக பெண் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் நன்றாக செயல்பட்டனர். ஏனாம் பகுதிக்கு ஒரு மல்லாடி என்றால் காரைக்கால் மல்லாடியாக கீதா ஆனந்தன் செயல்பட்டார். துணை சபாநாயகர் சிவக்கொழுந்து கனீர் குரலுடன் சிறப்பாக சபையை நடத்தினார்.
விக்கிரமாதித்தன் நாற்காலிகடந்த ஆட்சியின்போது துணை சபாநாயகராக இருந்த டி.பி.ஆர்.செல்வம் பேசாமலேயே இருந்துவிட்டார். அடுத்த முறை இந்த சபையை நடத்தும் வாய்ப்பினை அவருக்கும் தருவேன். ஏனெனில் இந்த இருக்கையில் இருந்து நான் படும் கஷ்டத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டும்.
சபாநாயகரின் இருக்கை என்பது விக்கிரமாதித்தனின் நாற்காலி போன்றது. இங்கிருந்து நியாயம்தான் பேசவேண்டும். இந்த இருக்கையில் அமர்ந்தால் நிறைய பொறுப்பு வரும்.
இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார்.