சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளி சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவு
வெளியில் இருந்து மைக் கொண்டு வந்து சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான நேற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரங்களை வழங்கும் விதமாக சட்ட திருத்தத்தை செய்யவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்தின் மீது அரசு கொறடா அனந்தராமன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது புதுவை கவர்னரின் செயல்பாடு குறித்து அவர் விமர்சித்தார். கவர்னர் கிரண்பெடி ஹிட்லர் போன்று செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
யார் மன்னிப்பு கேட்பது?அப்போது எழுந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து, சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு வந்துள்ளது. நீதி வென்றுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் சென்டாக் கலந்தாய்வு மூலம் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் எல்லோரையும் சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கவர்னரின் செயல்பாட்டால்தான் இது முடிந்தது. அவரை மன்னிப்பு கேட்க சொன்னீர்கள். இப்போது யார் மன்னிப்பு கேட்கப்போவது? என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ.வும் பேசினார்.
அவர்களது பேச்சுக்கு காங்கிரஸ் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரது மைக் இணைப்பினையும் துண்டிக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். மைக் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் அனைவரும் எழுந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியபடி இருந்தனர். இதனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டது. மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சபையைவிட்டு அசோக் ஆனந்து வெளியேறினார்.
துரோகம் செய்தவர்கள்இதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, சென்னை ஐகோர்ட்டில் மாணவர் சேர்க்கை விஷயத்தில் கோர்ட்டு எந்த உத்தரவினை பிறப்பித்தாலும் அதை ஏற்பதாக நாங்கள் கூறியுள்ளோம் என்றார்.
அமைச்சர் கந்தசாமி பேசும்போது, கடந்த 5 வருடமாக தனியார் மருத்துவ கல்லூரியில் முதுகலை படிப்பில் ஒரு இடம் கூட வாங்காமல் புதுவை மாணவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் என்.ஆர்.காங்கிரசார் என்று குற்றஞ்சாட்டினார்.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், மாணவர் சேர்க்கை தொடர்பாக கோர்ட்டில் கவர்னரா வழக்கு தொடர்ந்தார்? இல்லை என்.ஆர்.காங்கிரசார் போட்டனரா? யாரோ வழக்கு போட்டார்கள் என்றார்.
ஒலிபெருக்கியுடன் வந்து அமளிதொடர்ந்து பேசிய முதல்–அமைச்சர் நாராயணசாமி, ஒவ்வொரு வருடமும் பேரம்பேசி ரூ.50 கோடி ஊழல் செய்தது என்.ஆர்.காங்கிரஸ் அரசு என்றார்.
அப்போது கைகளில் வைத்து பேசக்கூடிய மைக்குடன் கூடிய ஒலிபெருக்கியை வெளியில் இருந்து எடுத்துக் கொண்டு சபைக்குள் அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. நுழைந்தார். இதை மற்ற எம்.எல்.ஏ.க்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சட்டசபைக்குள் அந்த ஒலிபெருக்கியை பயன்படுத்தி அசோக் ஆனந்து பேசத் தொடங்கினார். தங்களது கட்சியின் எம்.எல்.ஏ.வான என்.எஸ்.ஜே.ஜெயபாலையும் அந்த ஒலிபெருக்கி மூலம் பேச செய்தார். அவர்கள் இருவரும் சபாநாயகரின் இருக்கையை நோக்கிச் சென்று அமளியில் ஈடுபட்டனர்.
சபாநாயகரின் இருக்கை நோக்கி சென்றனர்இதைப் பார்த்ததும் அங்கு விரைந்துவந்த சபைக்காவலர்கள் சபாநாயகரின் இருக்கை அருகே செல்ல விடாமல் அவர்களை தடுத்தனர். என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான் ஆகியோரும் சபாநாயகர் இருக்கை அருகே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகரின் உத்தரவின் பேரில் அசோக் ஆனந்தின் கையில் இருந்த ஒலிபெருக்கியை பறித்த போது சபைக்காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் இருந்த பட்டனில் தவறுதலாக கை பட்டதால் அதில் இருந்து சங்கு ஒலிப்பது போல் திடீரென பலத்த சத்தம் எழுந்தது. அதன்பின் மைக்கை சபைக் காவலர்கள் பறித்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
சஸ்பெண்டு செய்து உத்தரவுஇதைத்தொடர்ந்து அவையில் விதிகளை மீறி செயல்படும் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள். இதைத்தொடந்து என்.எஸ்.ஜே.ஜெயபால், அசோக் ஆனந்து ஆகியோரை சபை முடியும்வரை (ஒருநாள்) சஸ்பெண்டு செய்வதாக அறிவித்தார்.
உடனே சட்டசபையில் சில கோப்புகளை வீசி எறிந்துவிட்டு அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. வெளியே சென்றார்.
அநாகரீகமான செயல்அதன்பின் பேசிய முதல்–அமைச்சர் நாராயணசாமி, இந்த அவையில் கருத்துசொல்ல எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் வெளியில் யாரிடமோ பேசிவிட்டு உள்ளே வந்து அவர்களின் ஏஜெண்டுபோல் செயல்படக்கூடாது. அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
அதற்கு பதில் அளித்த சபாநாயகர் வைத்திலிங்கம், அவர்களை இன்று முழுவதும் சஸ்பெண்டு செய்துள்ளேன். அவர்களின் செயல்பாடு குறித்து வீடியோ ஆதாரம் உள்ளது. அதனை பார்த்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சபை வளாகத்தை விட்டே வெளியேற்றினர்ஐகோர்ட்டு தீர்ப்பினை கொண்டாடும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான என்.எஸ்.ஜே.ஜெயபால், அசோக் ஆனந்து ஆகியோர் சட்டசபை வளாகத்தில் இனிப்பு வழங்கினார்கள். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்தனர்.
அப்போது சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர், சபாநாயகர் சஸ்பெண்டு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டமன்ற வளாகத்திலேயே இருந்து வருகிறார்கள். அவர்களை வெளியேற்ற சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். முடியாவிட்டால் நாங்கள் அவரை வெளியேற்றுவோம் என்று கூறினார்.
இதைத்தொடந்து சபாநாயகர் வைத்திலிங்கம், அவர்களை வெளியேற்ற சபைக்காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சட்டசபை லாபியில் இருந்த என்.எஸ்.ஜே.ஜெயபால், அசோக் ஆனந்து ஆகியோரை சபைக்காவலர்கள் சட்டமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.