புதுவையில் இருந்து திருச்சிக்கு லாரியில் கடத்திய 4,400 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது


புதுவையில் இருந்து திருச்சிக்கு லாரியில் கடத்திய 4,400 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2017 4:15 AM IST (Updated: 17 Jun 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் இருந்து பக்கத்து மாநிலமான தமிழகத்துக்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்க விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவை போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மரக்காணம்,

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் சோதனை சாவடியில் நேற்று காலை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு சென்ற டிப்பர் லாரியை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது.

349 அட்டை பெட்டிகள்

இதுபற்றி நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு, சோதனை சாவடி போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து சென்று அந்த டிப்பர் லாரியை விரட்டிச்சென்று மடக்கினர். அந்த லாரியில் மூடப்பட்டிருந்த தார்பாயை விலக்கிப் பார்த்தபோது, பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் ஆகியோர் மரக்காணம் போலீஸ் நிலையத்துக்கு வந்து, லாரியை சோதனை செய்தனர். அதில் 349 அட்டைப் பெட்டிகளில் 4,432 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

டிரைவர் கைது

இது தொடர்பாக டிப்பர் லாரியை ஓட்டிவந்த புதுவை மாநிலம் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த லட்சுமி நாராயணனை (வயது 32) போலீசார் கைது செய்தனர். மேலும் 4,432 மதுபாட்டில்கள் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
கைது செய்யப்பட்ட லட்சுமிநாராயணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் புதுவையில் இருந்து திண்டிவனம் வழியாக திருச்சிக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்றதாக தெரிவித்தார். தனக்கு திண்டிவனம் வரையே இந்த லாரியை ஓட்டிச்செல்ல வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. அங்கு சென்று ஒரு தொலைபேசி எண்ணுக்கு போன் செய்தால், இன்னொரு டிரைவர் அதை எடுத்துச்செல்வார் என்று என்னிடம் கூறப்பட்டது. யாருக்காக மதுபாட்டில்கள் கடத்தப்படுகிறது என்பது பற்றி தெரியாது என்றார்.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

மதுபாட்டில் கடத்தல் குறித்து மரக்காணம் மது விலக்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிப்பர் லாரியுடன் மதுபாட்டில்களை மடக்கி பிடித்த போலீசார் தேவராஜ், ராஜேந்திரன், அங்கமுத்து, ராஜேஷ், மதன் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டி, ரொக்கப்பரிசு வழங்கினார்.

Next Story