ஜமாபந்தி நிறைவு விழாவில் 414 பயனாளிகளுக்கு மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்


ஜமாபந்தி நிறைவு விழாவில் 414 பயனாளிகளுக்கு மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 17 Jun 2017 4:11 AM IST (Updated: 17 Jun 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

ஜமாபந்தி நிறைவு விழாவில் 414 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார்.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம் கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகத் தீர்வாயம் என்ற ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் குடிமக்கள் சந்திப்பு நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி 414 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரத்து 150 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடவூர் வட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா, நத்தம் வீட்டுமனைப்பட்டா, வாரிசு சான்று, சிறு, குறு விவசாயச்சான்று, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 870 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் 414 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

482 விவசாயிகளுக்கு...

கரூர் மாவட்டத்தில் மழையளவு குறைந்த காரணத்தால் தமிழக அரசு உத்தரவுப்படி 34 குளங்கள் தூர்வாரப்பட்டு குடிமராமத்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் குளங்களை பாதுகாத்து குப்பைகளை கொட்டாமல் ஆக்கிரமிப்புகள் செய்யாமல் இருக்க முன் வரவேண்டும். கடவூர் பகுதி வறட்சியான பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் விவசாயத்தை மேம்படுத்த 482 விவசாயிகளுக்கு மழைத்தூவான் கருவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அதிகளவில் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் கவிதா, வேளாண் இணை இயக்குனர் அல்தாப், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story