பெண் கழுத்தை அறுத்து கொலை: போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவர் தற்கொலை
அஞ்செட்டி அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவருடைய கணவர் தற்கொலை செய்துகொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பேட்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பா (வயது 70), விவசாயி. இவருடைய மனைவி சாலம்மாள் (வயது 60). இவர் கடந்த 14–ந் தேதி ஒப்புராணி காப்புக்காட்டில் கழுத்தை அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலைக்கு பிறகு சாலம்மாளின் கணவர் தலைமறைவாகி விட்டார். எனவே இந்த கொலையை அவர் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அஞ்செட்டி அருகே நூறுஒந்து சாமி மலையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பச்சையப்பா பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணைக்கு பயந்து தற்கொலைஅதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பச்சையப்பாவுக்கும், சாலம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கழுத்தை அறுத்து அவர் கொலை செய்ததும், போலீசாரின் விசாரணைக்கு பயந்து பச்சையப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பச்சையப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.