கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்–2 ஏ தேர்விற்கான பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்–2 ஏ தேர்விற்கான பயிற்சி வகுப்பினை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 ஏ தேர்விற்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது. நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கதிரவன் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:– போட்டிகள் நிறைந்த உலகில் நாம் குறிக்கோளோடு படிக்க வேண்டும். வாய்ப்புகள் வரும் போது தேர்வினை எழுத வேண்டும். அதுமட்டுமல்லாமல் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கையோடு செயல்பட்டால் உங்களுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பு உருவாகும். ஒரு வேலைவாய்ப்பு பெறக்கூடிய நிலை ஏற்படும்.
1,953 இடங்கள்தற்போது குரூப் ஏ பணிக்கான 1,953 இடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. அதற்காக இந்த பயிற்சி வகுப்புகள் ஆகஸ்டு மாதம் 31–ந் தேதி வரை நடைபெறும். இந்த பயிற்சியினை பயன்படுத்திக் கொண்டு வேலைவாய்ப்பை பெற்று, சமுதாயத்தில் உயர்ந்தவராக உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியின் போது பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு பயிற்சி கையேட்டினை கலெக்டர் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.