விவசாயிகள், ஆதிதிராவிடர் மக்களை சந்தித்த எடியூரப்பா குறைகளை கேட்டறிந்தார்


விவசாயிகள், ஆதிதிராவிடர் மக்களை சந்தித்த எடியூரப்பா குறைகளை கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 17 Jun 2017 5:03 AM IST (Updated: 17 Jun 2017 5:03 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடியூரப்பா விவசாயிகள், ஆதிதிராவிடர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மண்டியா,

மண்டியா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடியூரப்பா விவசாயிகள், ஆதிதிராவிடர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

தேர்தலுக்காக பல்வேறு வியூகங்கள்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2018) பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திப்பதற்காக காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளன. மேலும் அந்தந்த கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்.

இதில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான எடியூரப்பா இப்போதிருந்தே மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். குறிப்பாக அவர் மாநிலம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மக்கள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

சுற்றுப்பயணம்

அதன்படி அவர் நேற்று முன்தினம் மண்டியா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மண்டியா டவுனுக்கு சென்ற அவர் அங்கு மிம்ஸ் ஆஸ்பத்திரி அருகே உள்ள தமிழ் காலனி பகுதிக்கு சென்றார். அங்கு ஏராளமான ஆதிதிராவிடர் மக்களும், தமிழ் மக்களும் வசித்து வருகிறார்கள்.

அவர்களை சந்தித்த எடியூரப்பா, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம் ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் தெரு மின்விளக்குகள், கழிவுநீர் கால்வாய் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றும் கூறினர்.

ஆதிதிராவிடர் வீட்டில் சாப்பிட்டார்

அவர்களிடம் குறைகளை முழுமையாக கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்ட எடியூரப்பா, அதன்பிறகு அங்கிருந்து மத்தூருக்கு புறப்பட்டு சென்றார். மத்தூருக்கு சென்ற அவர் அங்குள்ள கொத்தனஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் ஒரு கட்சித் தொண்டரான ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த கெம்பபோரய்யா வீட்டில் காலை உணவு சாப்பிட்டார். முன்னதாக அவர் அப்பகுதியில் உள்ள அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து அவர் பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும், விவசாயிகளையும் சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள் மாநில அரசு விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

கன்னட அமைப்பினர் போராட்டம்

அதற்கு பதிலளித்து பேசிய எடியூரப்பா, விரைவில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசை வலியுறுத்துவேன் என்று உறுதி கூறினார். அப்போது அங்கு வந்த சில கன்னட அமைப்பினர் எடியூரப்பாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் விடுத்து மனு கொடுக்க முயன்றனர்.

ஆனால் அவர்களை சந்திக்க எடியூரப்பா மறுத்துவிட்டார். இதனால் எடியூரப்பாவுக்கு எதிராக கன்னட அமைப்பினர் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

--–

‘ஷூ’ அணிந்தபடி மாலை அணிவித்ததால் சர்ச்சை

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான எடியூரப்பா மத்தூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அங்குள்ள அம்பேத்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் காலில் ‘ஷூ’ அணிந்தபடி அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தார். எடியூரப்பாவின் இந்த செயலால் சர்ச்சை ஏற்பட்டது. இதைப்பார்த்த ஆதிதிராவிடர் அமைப்பினர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள், இந்த செயலுக்காக எடியூரப்பா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எடியூரப்பா மன்னிப்பு கேட்க மறுத்து, மவுனமாக அங்கிருந்து காரில் சென்றுவிட்டார்.



Next Story