டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம்


டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2017 9:30 PM GMT (Updated: 2017-06-21T18:51:16+05:30)

வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் உள்ள 2 மதுக்கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி,

வாணியம்பாடி வாரச்சந்தை பகுதியில் உள்ள 2 மதுக்கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தாசில்தார் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பெண்கள் மீது பீர் பீய்ச்சியடிப்பு

வாணியம்பாடி சி.எல்.ரோட்டில் வாரச்சந்தை பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு தெருவில் நடந்து சென்ற பெண்கள் மீது டாஸ்மாக் கடை அருகே அமர்ந்திருந்த போதை ஆசாமிகள் பீர்பாட்டிலை உடைத்து பீரை பீய்ச்சி அடித்தனர். இதனை கண்டித்தும் அந்த பகுதியில் உள்ள 2 டாஸ்மாக்கடைகளையும் உடனடியயக மூடக்கோரி நள்ளிரவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுநாள் இந்த பிரச்சினை குறித்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முரளிகுமார் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2 நாட்கள் மட்டும் மதுக்கடை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என அனைத்து கட்சி பிரதிநிதிகள் தாசில்தாரிடம் மனு அளித்தனர். அதனை கலெக்டருக்கு அனுப்பி கோரிக்கையை பரிந்துரைப்பதாக தாசில்தார் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று சம்பந்தப்பட்ட 2 மதுக்கடைகளின் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் மதுக்கடைகளை திறப்பதற்காக வந்தனர். ஆனால் பொதுமக்கள் அந்த கடைகளை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முரளிகுமார் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரம் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் 2 கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும். அதுவும் ரம்ஜான் பண்டிகை வரை கடையை திறக்கக்கூடாது. நிரந்ரமாக மூட முடியாவிட்டால் 2 கடைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மனுஅளித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக தாசில்தார் முரளிகுமார் தெரிவித்ததோடு கலெக்டரிடமிருந்து மறுஉத்தரவு வரும்வரை மதுக்கடை திறக்கப்படாது எனவும் உறுதியளித்தார். பின்னர் கூட்டம் நிறைவடைந்தது.


Next Story