மாணவ– மாணவிகள் ஆதிதிராவிடர் நல விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்


மாணவ– மாணவிகள் ஆதிதிராவிடர் நல விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 Jun 2017 9:45 PM GMT (Updated: 2017-06-21T19:18:44+05:30)

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவ– மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஆதிதிராவிடர் நல விடுதிகள்

வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ–மாணவிகளுக்கு விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு 24 விடுதிகள், மாணவிகளுக்கு 14 விடுதிகள், 15 உண்டு உறைவிட பள்ளிகள் செயல்படுகின்றன. கல்லூரி மாணவர்களுக்கு 7 விடுதிகள், மாணவிகளுக்கு 5 விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதிகளில் சேர 4 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கின்றவர்கள் தகுதி உடையவர்களாவார்கள்.

அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ– மாணவிகளும் விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஒரு விடுதிக்கு 5 நபர்கள் வீதம் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு கட்டாயம் சேர்க்கை அனுமதி வழங்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி நிலையத்தின் தொலைவு, இருப்பிடத்தில் இருந்து 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது.

விண்ணப்பிக்கலாம்

தகுதி உடைய மாணவ– மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை அடுத்த மாதம் (ஜூலை) 12–ந் தேதி வரையும், கல்லூரி விடுதிகளுக்கு 21–ந் தேதி வரையும் விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story