பள்ளி கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்கக்கோரி சாலை மறியல்


பள்ளி கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-21T20:06:48+05:30)

வேட்டவலம் அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் பள்ளிக்கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேட்டவலம்,

வேட்டவலம் அருகே செல்லங்குப்பம் கிராமத்தில் பள்ளிக்கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேட்டவலத்தை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.  பள்ளி கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால், கடந்த 2010–ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.58 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சில மாதங்களில் 9 வகுப்பறைகள் மற்றும் அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை புதிய பள்ளி கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. பழைய பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால், கட்டி முடிக்கப்படாத புதிய கட்டிடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள்.

புதிய பள்ளி கட்டிடத்தில் இருப்பிட வசதி (பெஞ்ச் வசதி), குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் மாணவிகள் சுகாதார வசதிக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. புதிய கட்டிட வகுப்பறைகளில் கதவு, ஜன்னல்கள் பொருத்தப்படாததால் இரவு வேளையில் சிலர் அசுத்தம் செய்கின்றனர். அதனால் வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகும் மாணவ–மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பள்ளி கட்டிடத்தை விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் பள்ளி கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை செல்லங்குப்பம் உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்கக்கோரியும், கட்டிடம் கட்டி நிதி ஒதுக்கியும் பணிகள் பாதியில் நிற்பதை கண்டித்தும் செல்லங்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் அவர்கள் சிறைபிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்து 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


Next Story