மாணவர்கள் யோகா செய்தால் பாடங்கள் எளிதில் புரியும்


மாணவர்கள் யோகா செய்தால் பாடங்கள் எளிதில் புரியும்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-21T20:06:49+05:30)

மாணவர்கள் தினமும் யோகா செய்தால் அவர்களுக்கு பள்ளியில் நடத்தும் பாடங்கள் எளிதாக புரியும் என கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேசினார்.

திருவண்ணாமலை,

மாணவர்கள் தினமும் யோகா செய்தால் அவர்களுக்கு பள்ளியில் நடத்தும் பாடங்கள் எளிதாக புரியும் என சர்வதேச யோகாதின விழாவில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேசினார்.

காலை 7 மணிக்கு நடந்த யோகாவில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

 அதைத்தொடர்ந்து யோகா பயிற்சியில் கலந்து கொண்ட கல்லூரி, பள்ளிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாய்சேவா யோகா முதன்மை மருத்துவர் எழில்மாறன் வரவேற்றார்.

மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே யோகாவில் கலந்து கொண்ட கல்லூரி, பள்ளிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அனைவரும் உடற்பயிற்சி, யோகா தினமும் செய்ய வேண்டும். யோகா தினத்தன்று மட்டும் யோகா செய்யக்கூடாது. தினமும் உடற்பயிற்சி, யோகா செய்வது நமது கடமையாகும். யோகா செய்தால் நல்ல பழக்க வழக்கங்கள் நம்மிடம் உண்டாகும். மாணவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் படிக்கும் பாடங்கள் எளிதில் மனதில் புரியும். மனநெருக்கடி, ஞாபகமறதி குறையும்.

பள்ளி மாணவர்கள் நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். பள்ளிக்கு ஒழுக்கமான உடைகளை அணிந்து வர வேண்டும். மாணவர்களுக்கு பள்ளியில் யோகா சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வீட்டின் அருகே வசிப்பவர்களுக்கும் யோகா சொல்லி கொடுக்க வேண்டும்.

மாவட்ட விளையாட்டு அரங்கு யோகா செய்வதற்கான சிறந்த இடமாக காணப்படுகிறது. யோகா செய்ய விரும்புபவர்களும், யோகா கற்றுக்கொடுக்க விரும்புபவர்களும் மாவட்ட விளையாட்டு அரங்கை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story