ராசிபுரம் அருகே விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வெண்ணந்தூரில் ஆர்ப்பாட்டம்


ராசிபுரம் அருகே விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வெண்ணந்தூரில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 4:51 PM GMT)

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராசிபுரம் அருகே விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மேலும் வெண்ணந்தூர் அருகே ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ளது கூனவேலம்பட்டி புதூர். இங்குள்ள சுமார் 200 விசைத்தறி கூடங்களில் 600–க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் துண்டுகள் மற்றும் வேட்டிகள் கரூர், ஈரோடு, சேலம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜி.எஸ்.டி.) விலக்கு அளிக்ககோரி கூனவேலம்பட்டி புதூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு விசைத்தறிகள் ஓடவில்லை.

மேலும் இன்று (வியாழக்கிழமை) கூனவேலம்பட்டி சந்தைப்பாவடியில் உண்ணாவிரதம் இருக்கவும், வேலை நிறுத்தம் செய்யவும், நாளை (வெள்ளிக்கிழமை) கலெக்டரிடம் மனு அளிக்கவும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது என்றும், வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வரை வர்த்தக பாதிப்பு ஏற்படும் எனவும், படிப்பு அறிவு குறைவாக உள்ளவர்களே இந்த தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டு உள்ளதாகவும், இதனால் ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்புகள்தான் அதிகமாகும் எனவும் விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

வெண்ணந்தூர்

வெண்ணந்தூரை அடுத்த அத்தனு£ர் பேரூர் மற்றும் ஆலாம்பட்டி பகுதியில் சுமார் 2 ஆயிரம் சிறு விசைத்தறியாளர்கள் உள்ளனர். தற்போது மத்திய அரசு, துணிகளின் மூலப்பொருளாகிய நூல் மற்றும் கோண் ஆகியவற்றின் மீது 5 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் ஏற்கனவே நலிவடைந்துள்ள விசைத்தறி தொழில் மேலும் நலிவடையும் என்று சிறு விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

இதை கவனத்தில் கொண்டு மத்திய அரசு விசைத்தறி ஜவுளிக்கு 5 சதவீத வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் நெசவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெண்ணந்தூர் அருகே சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிறு விசைத்தறியாளர்கள், விசைத்தறிக்கூடங்களை வருகிற 26–ந் தேதி வரை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

2–வது நாளாக

சேலம், நாமக்கல் மாவட்ட சிறு, குறு விசைத்தறியாளர்கள் சங்கம் மற்றும் சேலம் மண்டல குமரன் விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் ஜவுளிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து வெண்ணந்தூரில் உண்ணாவிரதம் நடந்தது.

தொடர்ந்து 6 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் இயங்கும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் நேற்று 2–வது நாளாக திறக்கப்படவில்லை. இந்த வேலைநிறுத்தம் காரணமாக 2 நாட்களில் சுமார் ரூ.2 கோடிக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story