பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக புகார்:சார்பதிவாளர் அலுவலகத்தை நிலத்தரகர்கள், பொதுமக்கள் முற்றுகை


பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக புகார்:சார்பதிவாளர் அலுவலகத்தை நிலத்தரகர்கள், பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 5:09 PM GMT)

பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக புகார் தெரிவித்து, சேலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை நேற்று நிலத்தரகர்கள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதன்பின்னர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் விளை நிலங்களை வீட்டு மனைகளாக விற்பனை செய்ய தடை விதித்தது. இதனால் பொதுமக்கள் நிலங்களை வாங்க முடியாமலும், வாங்கிய நிலங்களை விற்க முடியாமலும் கடந்த 10 மாதங்களாக கடும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலும் அடியோடு முடங்கியது. சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளை மறு பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்யலாம் என கடந்த 15–ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயர்நீதி மன்றம் உத்தரவு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாகவும், பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்களையும், நிலத்தரகர்களையும் அதிகாரிகள் திரும்பி அனுப்புவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சார்பதிவாளர் அலுவலகம் முற்றுகை

இந்தநிலையில், சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஏராளமான நிலத்தரகர்களும், பொதுமக்களும் வந்தனர். பின்னர், அவர்கள் அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர் முருகானந்தனிடம், பத்திரப்பதிவு சம்பந்தமாக கோர்ட்டு உத்தரவை ஏன் அமல்படுத்த மறுக்கிறீர்கள்? அதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பினர். அப்போது, அரசிடம் இருந்து எவ்வித உத்தரவும் வரவில்லை என்றும், இதனால் நிலங்களை கிரயம் செய்யவோ? மறு கிரயம் செய்யவோ? முடியாது என்று சார்பதிவாளர் முருகானந்தன் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நிலத்தரகர்கள் மற்றும் பொதுமக்கள், சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நிலத்தரகர்கள் மற்றும் பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தமிழக நிலத்தரகர்கள் நலச்சங்கம் மாநில தலைவர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:–

பொதுமக்கள் தவிப்பு

கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் கடந்த 10 மாதங்களாக வீட்டு மனைகளை வாங்கவோ, விற்பனை செய்யவோ முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட நிலங்களையும், வீடுகளையும் விற்க முடியாமல் தவித்து வந்த சூழ்நிலை இருந்தது. பொதுமக்கள் அவசர தேவைக்கு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்த வீட்டை விற்க தயார் செய்தால் அதை கிரயம் செய்ய முடியவில்லை.

கடன் திரும்ப செலுத்தவில்லை என்றால் வங்கிகள் ஜப்தி நடவடிக்கையை எடுக்கிறார்கள். ஆனால் அங்கீகாரம் பெற்ற நிலங்களை கிரயம் செய்யலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டும், அதை சார்பதிவாளர் அலுவலகங்களில் அமல்படுத்த அதிகாரிகள் மறுக்கிறார்கள். இதுபற்றி கேட்டால் அரசு உத்தரவு வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். எனவே, இந்த பிரச்சினையில் முதல்–அமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களை நிலத்தரகர்கள் நலச்சங்கத்தினர் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story