கடற்படை முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற நாகை மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்


கடற்படை முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற நாகை மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 5:43 PM GMT)

நாகையில் கடற்படை தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக நடைபெற்ற மீனவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதை தொடர்ந்து மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கும், ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்திற்கும் இடையே உள்ள பகுதியில் ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் ரூ.300 கோடி மதிப்பில் கடற்படை தளம் மற்றும் முகாம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இரு மீனவ கிராம மக்களும் இந்த கடற்படை முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாலுகா அலுவலகத்தில் 2 கிராம மீனவர்களையும் அழைத்து தாசில்தார் தலைமையில் 3 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த 19–ந்தேதி 4–வது முறையாக உதவி கலெக்டர் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கடற்படை முகாம் அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனக்கூறி இரு மீனவ கிராமத்தினரும் கடற்படை முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

வேலை நிறுத்தம் வாபஸ்

இதையடுத்து கடற்படை முகாம் அமைப்பது குறித்து மீனவர்களுக்கு சாதகமான பதில் வரும்வரை இரு கிராம மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை இரு கிராம மீனவர்களும் கடற்படை முகாம் அமைக்கக்கூடாது என கோரி நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மீனவர்களின் கருத்துக்களை கேட்காமல் கடற்படை முகாம் அமைக்கப்பட மாட்டாது. எனவே மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு, மீன்பிடிக்க செல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து இரு கிராம மீனவர்களும் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.


Next Story