ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் சோதனை


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் சோதனை
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 21 Jun 2017 6:44 PM GMT)

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் திடீர் சோதனை நடத்தினார். அப்போது நோயாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட உணவை ருசித்துப்பார்த்தார்.

ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள் வாங்கிச்செல்கிறார்கள். சுமார் 300 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் தவிர பிரசவ பிரிவு, குழந்தைகள் பிரிவு, காசநோயாளர்கள் பிரிவு, மனநல சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவ பிரிவுகளிலும் உள்நோயாளிகள் உள்ளனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோல் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா? என்று அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து வருகிறார்கள்.

கலெக்டர் சோதனை

இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று காலை திடீரென்று ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளுக்கு சென்று பார்வையிட்டு சோதனை செய்தார். வரிசையில் நின்ற நோயாளிகள் சிலரிடம் அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் உணவு தயாரிக்கும் பகுதிக்கு கலெக்டர் சென்றார். அங்கு உள்நோயாளிகளுக்கு கொடுக்க தயாராக இருந்த உணவை எடுத்து சாப்பிட்டு ருசித்துப் பார்த்தார். உணவின் தரத்தை மேலும் மேம்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் ஆஸ்பத்திரி வளாகம், நோயாளிகள் தங்கி இருக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியின் போது ஈரோடு மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகாச்சலகுமார் உடன் இருந்தார்.


Next Story