ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்


ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்
x
தினத்தந்தி 21 Jun 2017 11:30 PM GMT (Updated: 21 Jun 2017 6:58 PM GMT)

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:–

வறட்சி நிவாரண தொகை வழங்கப்பட்டதில் ஒரு சில விவசாயிகளின் வங்கி கணக்கில் தொகை வரவில்லை. மேலும் பாதி தொகை தான் செலுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் வறட்சி நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி நிவாரண தொகை அனுமதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் ஒட்ட வேண்டும்.

தண்ணீர் திருட்டு

அனுப்பர்பாளையத்தில் தனிநபர் ஒருவர் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் இருந்து தண்ணீர் திருடி தோட்டத்திற்கும், தென்னை நார் தொழிற்சாலைக்கும் பயன்படுத்தி வருகின்றார். இதுகுறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், வழக்குப்பதிவு செய்ய மறுக்கின்றனர். மேலும் அங்கு குடிநீர் விற்பனையும் நடைபெற்று வருகிறது. தினமும் 500 லாரிகளில் விற்பனை நடந்து வருகிறது. சம்பந்தபட்ட குடிநீர் வினியோக பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

அவரை மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை அதே இடத்தில் பணிஅமர்த்த கூடாது. குடிநீர் கட்டண தொகை அபராதமாக வசூலிக்க வேண்டும். பொள்ளாச்சி பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறும் போது, சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த நீரை கிருஷ்ணா குளத்தில் விட்டு விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

நிலவேம்பு கசாயம்

கடுமையான வறட்சியினால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதில்லை. மானிய விலையில் வைக்கோல் வழங்கும் மையங்களில் 2,500–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அனைவருக்கும் வைக்கோல் கிடைப்பதில்லை. இதனால் கால்நடைகள் தீவனமின்றி தவிக்கின்றன. திப்பம்பட்டியில் மானிய விலையில் வைக்கோல் வழங்கும் மையம் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் இன்னும் திறக்கவில்லை. பணிக்கம்பட்டியில் மர்ம காய்ச்சலும், ஒரு சில கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் தென்படுகிறது. எனவே சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்.

ஆனைமலை ஒன்றிய பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, ரூ.2½ கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த வளாகத்தில் செயல்பட்ட வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை காலி செய்ய ஒன்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக செயல்பட்ட வேளாண்மை, தோட்டக்கலைத்துறை 19 வருவாய் கிராமங்களுக்கு நடுவில் உள்ளது. இதனால் விவசாயி சுலபமாக வந்து செல்ல வசதியாக இருந்தது. இந்த நிலையில் வேளாண்மை தோட்டக்கலைத்துறைக்கு ரூ.1½ கோடியில் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய அலுவலகத்துக்கு அந்த வளாகத்தில் 33 சென்ட் இடம் ஒதுக்கினால் அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வசதியாக இருக்கும்.

சிறுத்தைபுலி நடமாட்டம்

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு முதல் போக நெல் சாகுபடி செய்ய தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆழியாறு அணையில் 40 அடி தண்ணீர் இருந்த போதும் தண்ணீர் திறந்த விட்ட முன் மாதிரி உள்ளது. எனவே தற்போது 70 அடி உள்ளதால் தராளமாக தண்ணீர் திறந்து விடலாம். குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த சூழ்நிலையில் நாயக்கன்பாளையத்தில் பி.ஏ.பி. வாய்க்கால் அருகில் கிணறு வெட்டி தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுத்து வருவதை தடுக்க வேண்டும்.

இ–சேவை மையங்கள் செயல்படுவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ–மாணவிகள் சான்றிதழ் பெறுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்களில் செயல்பட்டு வரும் இ–சேவை மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மாறுப்பட்டு உள்ளது.

எனவே ஒரே சீராக நிர்ணயித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கோதவாடிக்கும், அங்கு உள்ள குளத்திற்கும் இடையே உள்ள ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். குளத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும். வே.காளியாபுரம் கிராமத்தில் கடந்த 25 நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனவே கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீலாக்கம்பட்டியில் பி.ஏ.பி. வாய்க்கால் 26–வது கிலோ மீட்டரில் அருகில் தனியார் ஒருவர் மிகப்பெரிய குழி வெட்டி வைத்துள்ளார். இதனால் வாய்க்கால் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

கூட்டத்தில் சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சியாமளா, தாசில்தார் செல்வி, கிணத்துக்கடவு தலைமையிடத்து துணை தாசில்தார் முருகானந்தம் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேச்சு

கூட்டத்தில் சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது:–

பொள்ளாச்சி தாலுகாவில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகை இதுவரைக்கும் ரூ.60 கோடி வங்கி மூலம் வழங்கப்பட்டு உள்ளது. மீதி ஒரு கோடி உள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களுக்காக செலுத்திய பணம் திரும்ப வந்துள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் கொண்ட சிறப்பு முகாம் நடத்தி ஆய்வு செய்யப்படும். வறட்சி நிவாரண தொகை கிடைக்காத விவசாயிகள் செல்போன் எண்ணுடன் விண்ணபிக்க வேண்டும். அப்போது தகவல் தெரிவிக்க வசதியாக இருக்கும். முகாம் நடத்தி ஒரே நேரத்தில் தீர்வு காணப்படும். அனுப்பர்பாளையத்தில் தண்ணீர் திருட்டு தொடர்பாக வழக்குபதிவு செய்ய போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

டெங்கு காய்ச்சலை தடுக்க ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டு உள்ளது. வறட்சி காலத்தில் குடிநீருக்கு தான் முன்னுரிமை தரப்படும். பருவமழை பெய்யும் என்று இப்போதே முடிவு செய்ய முடியாது. எனவே பழைய ஆயக்கட்டிற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பும் போது தக்க பதில் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story