பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து உணவு வணிகர்கள் பதிவுச்சான்று பெற்றுக் கொள்ளலாம்


பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து உணவு வணிகர்கள் பதிவுச்சான்று பெற்றுக் கொள்ளலாம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 7:26 PM GMT)

பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து உணவு வணிகர்கள் பதிவுச்சான்று பெற்றுக் கொள்ளலாம் கலெக்டர் மலர்விழி தகவல்

சிவகங்கை,

உணவுப் பாதுகாப்புத் துறையின்கீழ் பதிவுச் சான்றிதழை தகுதிவாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

உரிமம்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி கடைகள், இறைச்சி கடைகள், டீக்கடைகள், பால் வியாபாரிகள், சாலையோர உணவு வியாபாரிகள், உணவு பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்கீழ் உரிமம் பெற வேண்டியது அவசியமாகும். வணிகர்கள் மட்டுமல்லாது மாவட்டத்தில் நடைபெறும் அன்னதானம் போன்றவற்றிற்கும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவது அவசியமாகும். இந்த உரிமத்தினை பெற விரும்பும் விற்பனையாளர் ரூ.2000–மும், தயாரிப்பாளர் ரூ.3000–மும் கட்டணமாக மாவட்ட கருவூலம் அல்லது சார் கருவூலத்தில் காசோலை எண் பெற்று வங்கியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பம்

வருடாந்திர விற்பனை செய்யும் அளவு ரூ.12 லட்சத்திற்கும் குறைவாக உள்ள வணிகர்கள் பதிவுச் சான்றிதழுக்கு ரூ.100 மட்டும் செலுத்தினால் போதும். அதன்பின்னர் www.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு தங்களது கையொப்பமிட்டு இணையதளத்தில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினரிடம் சமர்ப்பிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் பதிவு பெறுவதற்கு உணவுப் பாதுகாப்பு துறையை மட்டுமே அணுக வேண்டும் என்றும், இடைத்தரகர்கள் எனக் கூறிக்கொள்ளும் எந்த நபர்களையும் உணவு வணிகர்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

பொது சேவை மையங்கள்

உணவுப் பாதுகாப்புத்துறையின் பதிவுச் சான்றிதழுக்கு தகுதி வாய்ந்த உணவு வணிகர்கள் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழ் பெறலாம். மேலும், உணவு வணிகர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் எனவும், உரிமம் பெறுவதற்கு வழங்கப்பட்ட காலநீடிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் உணவுப் பாதுகாப்பு உரிமம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story