என்னிடம் போராடும் சக்தி இன்னும் குறையவில்லை சர்வதேச யோகா தின விழாவில் அன்னா ஹசாரே பேச்சு


என்னிடம் போராடும் சக்தி இன்னும் குறையவில்லை சர்வதேச யோகா தின விழாவில் அன்னா ஹசாரே பேச்சு
x
தினத்தந்தி 21 Jun 2017 10:00 PM GMT (Updated: 2017-06-22T00:58:03+05:30)

என்னிடம் போராடும் சக்தி இன்னும் குறையவில்லை என்று பெங்களூருவில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.

பெங்களூரு,

என்னிடம் போராடும் சக்தி இன்னும் குறையவில்லை என்று பெங்களூருவில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறினார்.

சர்வதேச யோகா தினம்

கர்நாடக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சர்வதேச யோகா தின விழா பெங்களூரு கன்டீரவா விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஒரு மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:–

பலமான இந்தியாவை உருவாக்க யோகா பயிற்சி மிக அவசியம். யோகா பயிற்சி செய்பவர்களுக்கு மனது சுத்தமாக இருக்கிறது. நல்ல வி‌ஷயங்கள், கொள்கைகள் மூலம் நமது வரலாறும் தூய்மையாக இருக்கிறது. நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் நமது ஒரே நோக்கம். அதற்காக இளைஞர் சக்தியை பலப்படுத்த வேண்டும்.

போராடும் சக்தி உள்ளது

எனக்கு 80 வயதானாலும், 27 வயது இளைஞரை போல் நான் பணியாற்றுகிறேன். எல்லா பணிகளிலும் எனக்கு ஆர்வம் உள்ளது. ஆனால் இன்று இளைஞர்கள் 80 வயது முதியவர்களை போன்று இருக்கிறார்கள். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை போன்று நடந்து கொள்கிறார்கள். சிலர் என்னை பார்த்து, இவருக்கு தான் வயதாகிவிட்டதே, இனி என்ன செய்யப்போகிறார்? என்று பேசுகிறார்கள். ஆனால் என்னிடம் போராடும் சக்தி உள்ளது.

என்னிடம், பணம், சொத்து எதுவும் இல்லை. கோவிலில் படுக்கிறேன். சாப்பிட ஒரு தட்டு உள்ளது. படுக்க ஒரு பாய் இருக்கிறது. எனது வங்கி இருப்பு குறித்து நான் கவலைப்படவில்லை. அதிகாலை 4 மணிக்கு எழுந்து நடைபயிற்சிக்கு செல்கிறேன். அடுத்து மூச்சு பயிற்சி எடுக்கிறேன். அதன் பிறகு யோகா பயிற்சி செய்கிறேன். மனதை தூய்மையாக வைத்துக் கொள்கிறேன்.

ஊழலை ஒழிக்கவும்...

அரசியல் கட்சிகள் யோகா பயிற்சியை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். கிராமங்களை முன்னேற்றவும், ஊழலை ஒழிக்கவும் போராட வேண்டியது அவசியம். என்னிடம் போராடும் சக்தி இன்னும் குறையவில்லை.

இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.

இதில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார், மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார், யோகா குரு வசனானந்தா சுவாமி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் யோகா பயிற்சி செய்தனர். இதில் மூதாட்டி ஒருவர் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story