சர்வதேச யோகா தினத்தையொட்டி மைசூருவில் 45 ஆயிரம் பேர் யோகாசனம் செய்தனர் கின்னஸ் சாதனை முயற்சியாக நடத்தப்பட்டது


சர்வதேச யோகா தினத்தையொட்டி மைசூருவில் 45 ஆயிரம் பேர் யோகாசனம் செய்தனர் கின்னஸ் சாதனை முயற்சியாக நடத்தப்பட்டது
x
தினத்தந்தி 21 Jun 2017 10:00 PM GMT (Updated: 2017-06-22T01:00:28+05:30)

சர்வதேச யோகா தினத்தையொட்டி மைசூருவில் கின்னஸ் சாதனை முயற்சியாக நடத்தப்பட்ட யோகா நிகழ்ச்சியில் 45 ஆயிரம் பேர் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.

மைசூரு,

சர்வதேச யோகா தினத்தையொட்டி மைசூருவில் கின்னஸ் சாதனை முயற்சியாக நடத்தப்பட்ட யோகா நிகழ்ச்சியில் 45 ஆயிரம் பேர் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதேபோல் மைசூருவிலும் சர்வதேச யோகா தினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு புதுமுயற்சியாக மைசூருவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நிகழ்ச்சி சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

முன்னதாக இந்த கின்னஸ் சாதனை முயற்சிக்காக கடந்த சில தினங்களாக யோகா பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பள்ளி–கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என 9 ஆயிரம் பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

முரசு கொட்டி தொடங்கிவைத்தார்

குதிரை பந்தய மைதானத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த யோகா நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான மகாதேவப்பா முரசு கொட்டி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:–

தினமும் யோகா பயிற்சி செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, ஆன்மாவுக்கு அமைதி கிடைக்கிறது. இந்தியாவில் பதஞ்சலி என்ற முனிவர் யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்களை உலகத்திற்கு எடுத்து கூறினார். எனவே தான் இன்று (அதவது நேற்று) உலகம் முழுவதும் 180 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

49 யோகாசனங்கள்

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சதானந்தகவுடா பேசுகையில், உடலையும், ஆன்மாவையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள யோகா பயிற்சி உதவுகிறது. மனிதர்களிடம் உள்ள ஞானத்தையும், திறமையையும் வெளிக்கொணர உதவும் அற்புதமான கலை யோகா. இந்த கலையை நமது முன்னோர்கள் உலகத்திற்கு விட்டு சென்று உள்ளனர் என்றார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் நேற்று பள்ளி–கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என 45 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இந்த யோகா பயிற்சியில் 49 வகையான யோகாசனங்கள் கற்றுத்தரப்பட்டது.

சிறப்பு பார்வையாளர்கள்

இந்த யோகா பயிற்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க நடத்தப்பட்டதால் ரிசர்வ் வங்கி ஆடிட்டர் தாகூர் தேசாயி, ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி லட்சுமணன் நிகழ்ச்சி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த யோகா நிகழ்ச்சியை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரன்தீப் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதாப் சிம்ஹா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சோமசேகர், விஜயகுமார், மேயர் ரவிகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவி நகிமா சுல்தான், மைசூரு மண்டல பி‌ஷப் வில்லியம், முஸ்லிம் மதகுரு ஜனாப் சாகீப், சிவானந்த சுவாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story