பெண்களால் பூட்டப்பட்ட மதுக்கடையை திறக்க முயற்சி போலீசார் அனுமதி மறுப்பு


பெண்களால் பூட்டப்பட்ட மதுக்கடையை திறக்க முயற்சி போலீசார் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 21 Jun 2017 7:32 PM GMT)

அருப்புக்கோட்டையில் பெண்களால் பூட்டப்பட்ட மதுக்கடையை திறக்க முயற்சி போலீசார் அனுமதி மறுப்பு

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் பெண்களால் போடப்பட்ட பூட்டினை உடைத்து மதுபானக்கடையை திறக்க முயற்சி நடந்தது. ஆனால் கடையை திறக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

எதிர்ப்பை சந்தித்த மதுபானக்கடை

அருப்புக்கோட்டை பாலையம்பட்டி வேல்முருகன்காலனியில் புதிதாக மதுபானக்கடை திறக்கப்பட்டது முதல் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை மறியல், முற்றுகை என பல கட்ட போராட்டங்களை நடத்தியதோடு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தும் முறையிட்டனர். இதனால் சுமார் 20 நாட்கள் மட்டும் இயங்கிய அந்த மதுபானக்கடை மூடப்பட்டது.

கடை ஊழியர்கள் கடையினை அடைத்துவிட்டு சென்ற நிலையில் அந்தப்பகுதி பெண்களும் தனியாக பூட்டுபோட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் அந்தக்கடையை மீண்டும் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மதுபிரியர்கள்

கடையை திறக்க நேற்று மதியம் டாஸ்மாக் ஊழியர் அங்கு வந்தார். கடை மீண்டும் திறக்கப்படும் தகவல் கிடைத்ததும் மதுப்பிரியர்களும் ஆவலோடு அங்கு வரத்தொடங்கினார்கள். பெண்கள் போட்டுவைத்திருந்த பூட்டை டாஸ்மாக் ஊழியர் உடைக்க முயற்சி செய்த நிலையில் அருப்புக்கோட்டை போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள், கடையை திறக்க அனுமதி தரவில்லை. கடையை திறந்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறியதை தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர் அங்கிருந்து புறப்பட்டார். மதுப்பிரியர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச்சென்றனர்.


Next Story