திருப்பரங்குன்றம் அருகே இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கட்டக்கோரி சாலைமறியல்


திருப்பரங்குன்றம் அருகே இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கட்டக்கோரி சாலைமறியல்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-22T01:10:55+05:30)

திருப்பரங்குன்றம் அருகே இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை கட்டக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் நேதாஜிநகர் பஸ் நிறுத்தத்தில் மறைந்த முன்னாள் எம்.பி. மோகன் பரிந்துரையில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 96–ம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிலையில் பயணிகள் நிழற்குடையை சிலர் இடித்து விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்(திட்டம்) கார்த்திகாயினிடம் மனு கொடுத்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும், மேலும் நிழற்குடையை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை தனக்கன்குளம் நேதாஜி நகர் பஸ் நிறுத்ததில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் மணிக்காளை, கருப்பையா, தர்மர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் திரண்டனர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் மதுரை–திருமங்கலம் செல்லும் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நீண்டதூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வர வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதைதொடர்ந்து ஆணையாளர் கா£த்திகாயினி அங்கு வந்து மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது நிழற்குடை இருந்த இடத்திலேயே புதிதாக நிழற்குடை அமைக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும், அப்போது தான் மறியலை கைவிடுவோம் என பொதுமக்கள் கூறினர். சுமார் 2 மணிநேரம் மறியல் நடந்த போதிலும் முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலெக்டரை சந்திக்க மதுரைக்கு சென்றனர். பின்னர் கலெக்டரை சந்தித்து அவர்கள் பயணிகள் நிழற்குடையை கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.


Next Story