பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-22T01:19:27+05:30)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைக்குளம்,

அரியலூர் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யூ.சி. சுகாதார தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பணியாளர் சம்மேளன துணை பொதுச்செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மாதந்திர சம்பளத்தில் பிடிக்கப்படும் சேமநல நிதிக்கு 2016–17–ம் ஆண்டு வரை வட்டியுடன் சேர்த்து இருப்பு கணக்கை கொடு, விடுபட்டு போன 2009–10–ம் ஆண்டின் கணக்கை கொண்டு வரவேண்டும். மாவட்ட கலெக்டரின் சந்தைக்கூலியை தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே அமல் படுத்த வேண்டும். இலவச வீட்டுமனை, மருத்துவ காப்பீடுத்திட்ட அட்டை வழங்க வேண்டும்.

பணி நியமனம் வழங்க வேண்டும்

சுகாதார பணியாளர்களுக்கு தனியாக கழிவறை, சீருடை மற்றும் அறை அமைத்து கொடுக்க வேண்டும். பணிக்காலத்தில் இறந்த குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெற்றி மற்றும் உடம்பில் பட்டை நாமமிட்டும், வேப்பிலையை கையில் ஏந்தியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் தார்ப்பாய் கட்டும் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன், அரியலூர் நகர தெரு வியாபாரிகள் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த முரளிகிருஷ்ணன், பன்னீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story